'புலிகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்திருந்த எம்.ஜி.ஆர்.'
2017-11-29 09:24:40 | General

1987 இல் இலங்கை  இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்தமை இந்தியாவுக்கும் புலிகளுக்குமிடையில்  யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. ஆனால், அச்சமயம் முதலமைச்சராகவிருந்த எம்.ஜி.இராமச்சந்திரன் அந்த விவகாரத்தில் புலிகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்திருந்ததாக போராளிகள் குழு தெரிவித்திருந்தது. 

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இந்திய இராஜதந்திரி ஜே.என். டிக்சித்துக்குமிடையில்  இடம்பெற்ற பதற்றமான உரையாடலின் விபரங்கள் உடன்படிக்கை குறித்து விடுதலைப் புலிகள் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது பற்றிய எண்ணப்பாட்டைத் தருகின்றன.

அத்துடன், இந்திய அரசாங்கத்திற்கும் அந்த அமைப்புக்குமிடையில் பகைமை ஏற்பட்டதற்கான தன்மையையும்  அது விளக்குகின்றது. இந்தியா குறிப்பாக ஜே.என்.டிக்சித் உடன்படிக்கைக்கு புலிகள் தமது அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென அழுத்தத்தை கொடுத்திருந்ததாக புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், எம்.ஜி.ஆர். தனது ஆதரவை பிரபாகரனுக்கு வழங்கியிருந்தார். அவர் அந்த எண்ணப்பாட்டை எதிர்த்திருந்தார்.

“உங்கள் தீர்மானம் என்னவாக இருந்தாலும் நான் அதற்கு ஆதரவளிப்பேன் என்று எம்.ஜி.ஆர்.  தெரிவித்ததாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையைத் தளமாகக் கொண்ட வி.ஓ.சி. நூலகத்தினால் பிரசுரிக்கப்பட்ட நூலின் தொகுதியொன்றில் இது காணப்படுகிறது. 

“ விடுதலைப் புலிகள் அவ்வப்போது ஆவணங்களுடன் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா மற்றும் இலங்கையின் பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை விளக்க ஆவணங்களுடன் வந்துள்ளனர்.

நாங்கள் அவற்றைச் சேகரித்து வைத்துள்ளோம். நூலாக அவற்றைத் தொகுக்க ஆரம்பிக்கவுள்ளோம். அத்துடன், வேலுப்பிள்ளை பிரபாகரனின் சரிதையுடன் அதனை ஆரம்பிக்கவுள்ளோம் என்று வி.ஓ.சி. நூலகத்தின் கவிஞர் இளையபாரதி கூறியுள்ளார். 

உண்மையில் இலங்கை  இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட வருடமான 1987 இல் தமிழீழ சுதந்திர இயக்கம் கடினமான கட்டத்திலிருந்தும் தப்பியிருந்தது என்று விடுதலைப் புலிகள் அமைப்பு விபரித்திருந்தது. விடுதலை இயக்கம் எண்ணெயிட்டு அழுத்தப்பட்ட நாகம் போன்று நசுக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் சனி வருடமாக இருந்தது என்று விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. 
பிரபாகரன் மனதை மாற்றியது எது?

இலங்கை  இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை விபரித்திருக்கும் விடுதலைப் புலிகளின் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தின் சுதுமலை அம்மன் கோவிலிலிருந்து இந்திய விமானப் படையின் ஹெலிகொப்டரில் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடில்லியிலுள்ள அசோகா ஹோட்டலுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டிருந்தாõர். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம்  விடுதலைப் புலிகளின் மற்றொரு தலைவர் திலீபன் ஆகியோர் பிரபாகரனுடன் சென்றிருந்தனர்.
"அவர்களுக்கு டிக்சித் உடன்படிக்கையின் பிரதியொன்றை வழங்கினார். ஒரு மணித்தியாலத்தில் அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அவர்களிடம் வலியுறுத்தியிருந்தார். இந்த உடன்படிக்கை  இரு அரசாங்கங்களுக்குமிடையிலானது எனவும் நீங்கள் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.  

நீங்கள் இதனை ஏற்றுக் கொள்வீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் தலைவர்களிடம் டிக்சித் கூறியிருந்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஒரு மணித்தியாலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரை டிக்சித் சந்தித்திருந்தார். ஆனால்  தமிழர்களின் இரத்தத்தினால் கட்டியெழுப்பப்பட்ட 15 வருட பூர்த்தியான இயக்கத்தை தன்னால் 72 மணித்தியாலங்களில் கலைத்து விட முடியாது என்பதை பிரபாகரன் தெளிவாக தெரிவித்திருந்தார்.

"தீர்வொன்றுக்கு முன்பாக ஆயுதங்களை நாங்கள் கைவிட வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? ஒரு துளி ஆயுதங்களைக் கூட நாங்கள் போட மாட்டோம். எந்தவொரு உறுதிமொழியும் இல்லாமல் எமது மக்களுக்கு பாதுகாப்பை அவையே வழங்குகின்றன.  எமது மக்களின் அங்கீகாரம் இல்லாமல் எம்மால் உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று பிரபாகரன் டிக்சித்துக்கும்  ஏனைய அதிகாரிகளுக்கும் கூறியுள்ளார்.

"நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ உடன்படிக்கை அமுல்படுத்தப்படும். நீங்கள் உங்கள் ஆயுதங்களை கைவிடாவிட்டால் இந்திய இராணுவத்தை நாங்கள் பயன்படுத்தி அந்த இலக்கை பூர்த்தி செய்வோம். நீங்கள் எமது பாதுகாப்பில் இருக்கின்றீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.  இந்த இடத்தை விட்டு நீங்கள் செல்ல முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை' என்று அவர்களிடம்  டிக்சித் கூறியுள்ளார். 

"நீங்கள் அழிக்கப்படுவீர்கள்


பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் நின்ற போது "இந்தியா வல்லரசாக உள்ளது. நீங்கள் சிறிய ஆயுதக் குழுவாக உள்ளீர்கள்.

நீங்கள் எதையென்றாலும் கூறுவதற்கு முன்னர் சிந்தித்துக் கூறுங்கள். நீங்கள் அழிக்கப்படுவீர்கள்' என்று டிக்சித் கூறியுள்ளார்.  அதன் பின்னர் பிரபாகரனுடனும் ஏனையோர்களுடனும் கலந்தாலோசனை நடத்தி தீர்மானத்தை எடுக்குமாறு அன்டன் பாலசிங்கத்திடம் அவர் கேட்டுள்ளார்.

 “ ரோ மற்றும் புலனாய்வு அதிகாரிகளுடன் அடுத்த இரு நாட்களும் கழிந்தன. உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.  தமது முயற்சியில் தாங்கள் வெற்றியடைய முடியாதென அவர்கள் உணர்ந்து கொண்ட போது முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உதவியை இந்தியா நாடியிருந்தது' என்று புலிகள் அமைப்பு தெரிவித்திருந்தது.

ஆனால், எம்.ஜி.ஆர். முன்னிலையில் அந்த யோசனையை பிரபாகரன் நிராகரித்திருந்தார். எம்.ஜி.ஆர். மத்திய அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டு டில்லிக்கு சென்றிருந்தார். இரு தரப்பினரது கருத்தையும் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர். இந்த விடயத்தை பிரபாகரனுடன் தான் கலந்தாராய விரும்பியுள்ளதாக டிக்சித்துக்கு கூறியுள்ளார். 

"எம்.ஜி.ஆரின் மனதில் என்ன இருக்கின்றது என்பதையிட்டு பிரபாகரன் ஆச்சரியமடைந்திருந்தார். உடன்படிக்கைக்கு ஆதரவளிக்குமாறு எம்.ஜி.ஆர். எங்களை வலியுறுத்துவாரா என்பது பற்றி அவர் ஆச்சரியப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கும் அவருக்குமிடையிலான உறவில் முறிவு ஏற்படுவதற்கு இது வழிவகுக்குமா என்பது குறித்தும் அவர் எண்ணியிருந்திருந்தார்.

ஆனால் அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்த எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் என்று அந்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளுக்கு நம்பிக்கையூட்ட மேற்கொள்ளப்பட்ட ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்ததன் பின்னர் ராஜிவ் காந்தியை சந்திப்பதற்கு பிரபாகரன் தீர்மானித்தார். 

பிரபாகரன் மனமாற்றம் குறித்து டிக்சித்தின் நூலில்  கூறப்பட்டிருப்பது என்ன?

ஜே.என்.டிக்சித் தனது  "அசைன்மன்ட் கொலம்பு' (Assignment Colombo) என்ற நூலில் பிரபாகரனுடனான தனது நீண்ட கருத்துப் பரிமாற்றங்களை நினைவு கூர்ந்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்த போது உடன்படிக்கை தொடர்பான சகல விபரங்கள் குறித்தும் பிரபாகரனுடன் தான் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றம் குறித்து அவர் விபரித்துள்ளார்.

“ஆனால்  பிரபாகரன் தீர்மானம் எடுக்காமல் இருந்தார். தன்னை யாழ்ப்பாணத்துக்கு திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தியிருந்தார். எம்.ஜிஆர். அவரை அமைதியாக இருக்குமாறு கூறினார். மேலும் கலந்துரையாடல்களுக்காக டில்லியில் இருக்குமாறு அவர் தெரிவித்திருந்தார் என்று டிக்சித் கூறியுள்ளார். 

"வடக்கு, கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் தான் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் பிரபாகரன் கூறியிருந்தார். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கைப் படையினரின் சகல இராணுவ முகாம்களையும் மூடாமல் உடன்படிக்கையில் கைச்சாத்திடக் கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

சந்திப்பு தீர்மானமின்றி இடம்பெற்றிருந்தது. இந்தியப் பிரதமருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நான்காவது தடவையாக அவர் முயற்சிக்கின்றார் என்று நான் பிரபாகரனுக்குக் கூறியிருந்தேன். திம்புவிலும் பின்னர் ஆகஸ்ட் / செப்டெம்பர் 1985 இலும் பின்னர் பெங்களூரிலும் அவர் செய்திருந்ததை நான் நினைவு கூர்ந்தேன். உடன்படிக்கையின் இறுதி நகல் அவருக்கு காட்டப்பட்டிருக்கின்றது என்று பிரபாகரனுக்கு கூறினேன்.

இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் அவர் அதனை படிக்க வேண்டுமென்று கூறியிருந்தேன். டில்லிக்கு வரும் போது சென்னையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் பிரபாகரனின் மனம் மாறியிருந்தது என்பது இந்திய அதிகாரிகளின் கணிப்பீடாக இருந்தது' என்று டிக்சித் தனது நூலில் கூறியுள்ளார்.

  
இந்து

TOTAL VIEWS : 1004
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1oqii
  PLEASE ENTER CAPTA VALUE.