ஏமாற்றுவோரை வாக்காளர்கள் நிராகரிப்பர்; தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிய கூறுகிறார்
2018-01-08 12:10:59 | General

தேர்தலுக்குப் பின்னர் உடனடியாகவே அரசியல் கட்சிகளை ஜனநாயகப் படுத்துவதற்கான தன்மையை தற்போதைய தேர்தல் முறைமை கொண்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

"எதேச்சாதிகாரத்தை மீறி ஜனநாயகத்தைப் பேணுவதற்கு சகல அரசியல் கட்சிகளுக்கும் நிர்ப்பந்தம் இருக்கும். தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்வதிலிருந்தும் அது ஆரம்பமாகியுள்ளது. அதனை நோக்கி நாடு நகர்ந்திராவிட்டால் புதிய தேர்தல் முறைமை  ஒருபோதுமே எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை வழங்காது என்று அவர் கூறியுள்ளார். 

புதிய தேர்தல் முறைமை  விருப்பு வாக்கு முறைமைக்கு பதிலாக தெரிவு செய்யும் முறைமையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அறிவூட்டப்படாததாலேயே நாட்டின் தேர்தல்களில் வன்முறை அங்கமாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு உதயமாகியுள்ள நிலையில் பெப்ரவரி 10 இல் ஏமாற்றுவோரை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என வேட்பாளர்களுக்கு அவர் எச்சரித்திருக்கின்றார். "சண்டே ஒப்சேவர்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு;

கேள்வி: தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் கட்சிச் செயலாளரின் வகிபாகம்  சகல வல்லமையும் நிறைந்ததாக காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: செயலாளருக்கு அல்ல கட்சியின் உயர்மட்டம் அல்லது தலைமைத்துவத்துவமே வல்லமை நிறைந்ததாக உள்ளது.  இந்த முறைமை முழுமையாக செயற்படும் போது கட்சி ஜனநாயகத்தை நாங்கள் அவசியம் கொண்டிருப்போம். அநேகமான கட்சிகள் ஏற்கனவே தேசிய சபைகள் மத்திய குழு நிறைவேற்றுக் குழு மற்றும் நிர்வாக உறுப்பினர்களை  கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தக் கட்டமைப்புகள் எவ்வாறு செயற்பாட்டுத் திறன் நிறைந்தவையாக இருக்கின்றன என்பதை நாங்கள் அறிய மாட்டோம். அல்லது அவற்றுக்கு என்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்பதும் எனக்குத் தெரியாது. எதிர்வரும் தேர்தல்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட உடனடியாகவே கட்சிக்குள் ஜனநாயகத்துக்கான போராட்டம் ஆரம்பமாகும் என நான் நினைக்கிறேன். 

நாங்கள் அங்கு செல்ல வேண்டியுள்ளது. கட்சித் தலைவர்கள் அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்களை கூற முடியாது. ஆனால் இது தேர்தல் ஆணைக்குழுவின் கருத்து அல்ல என்பதையும் எனது தனிப்பட்ட கருத்து என்பதையும் நான் இங்கு கூறுவது அவசியம். எவ்வாறாயினும் நாடு ஜனநாயகத்தைக் கொண்டிருக்க வேண்டும். எமக்கு ஜனநாயக சமூகங்களும் அரசியல் கட்சிகளும் தேவைப்படுகின்றன. 

கேள்வி: கட்சி செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை அகற்ற முடியுமா? அதன் பின்னர் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு புதிதாக உறுப்பினர்களை நியமிக்க முடியுமா?

பதில்: அங்கு இரு வகையான உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பார்கள். மற்றைய உறுப்பினர்கள் பட்டியலைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எந்தவொரு அரசியல் கட்சியும் கட்சியிருந்து தமது உறுப்பினர்களை நீக்க முடியும். ஆனால்,  முறையான நடைமுறையை கொண்டிருக்க வேண்டும். சட்டத்திற்கு அமைவாக அவர்கள் செயற்பட வில்லையானால் நீக்கப்பட்ட உறுப்பினர்கள் நீதிமன்றத் தலையீட்டை நாட முடியும்.

கேள்வி: வேட்பாளர் பட்டியலில் 25% பெண்கள் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என தேர்தல் சட்டம் கூறுகின்றது. இந்த தேவைப்பாட்டை நிறைவேற்றுவதற்கு கட்சிகள் கிடைக்கக்கூடிய எந்தவொரு தனிப்பட்டவர்களையும் நியமிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காலக்கெடு முடிவதற்கு முன்னர் நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தேர்தலுக்குப் பின்னர் இந்தப் புதிய முகங்கள் தொடர்பாக கட்சிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருக்க முடியுமா? அதற்கு இடமளிக்கப்படுகின்றதா?

பதில்: வெற்றி பெறும் கட்சிகள் வெற்றி பெறும் வேட்பாளர்களை நியமிப்பது அவசியம். சட்டம் மிகவும் கடுமையானதாக உள்ளது. விசேடமாக பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக கடுமையாக உள்ளது. உள்ளூராட்சி சபையொன்றின் அரசியல் கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்கள் 25 வீதத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும்.

ஆனால் அங்கு ஒரு ஏற்பாடு உள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியாவது ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை மட்டும் பெற்றுக் கொண்டால் அங்கு பெண் ஒருவரை நியமிப்பதற்கான தேவைப்பாடு ஏற்படாது. ஆனால், மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் மூன்றாவது உறுப்பினர் பெண்ணாக இருப்பது அவசியமாகும்.

கேள்வி: ஆசனங்களை நிரப்புவதற்கு வெளியாட்களை அவர்களால் கொண்டுவர முடியுமா?

பதில்: இல்லை. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கடந்த காலத்தில்  நீதிமன்ற வழக்குகள் இருக்கின்றன. அதற்கு அமைவாக நாங்கள் செயற்படுவோம்.

கேள்வி: விருப்பு வாக்கு முறைமை இல்லாமல் சென்றுள்ளது. அதனால் தேர்தல்களுடன் தொடர்புபட்ட வன்முறைகள் குறைவதற்கான சாத்தியப்பாடு உள்ளது. இந்த நடவடிக்கை எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்:  முன்னர் நாங்கள் விருப்பு வாக்கு முறைமையை கொண்டிருந்தோம். அத்துடன் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்டிருந்தோம். விருப்பு வாக்கு முறையுடன் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் இருந்தது. விருப்பு வாக்கு முறைமை இல்லாமல் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையானது ஜனநாயகமற்றதாகும். அது கட்சி செயலாளர்கள்  முறைமையாக இருந்தது.

முக்கியமான விடயமாக இருப்பது விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் ஒவ்வொரு வாக்கும் சமபெறுமானத்தைக் கொண்டிருப்பதாகும். தொகுதிவாரி முறைமையைப் போன்றல்லாமல் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் சுமார் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டால் 100 வாக்குகளில் இரு வேட்பாளர்கள் 33 வாக்குகளை ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டால் மூன்றாவது வேட்பாளர் 34 வாக்குகளைப் பெற்றால் 34 வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். ஏனைய இருவரும் தோல்வியடைவார்கள்.

ஆனால் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் மூன்று வேட்பாளர்களுமே ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வர். போனஸ் ஆசனம் இருந்தால் 34 வாக்குகளைப் பெற்ற வேட்பாளரும் போனஸ் ஆசனத்தைப் பெற்றுக் கொள்வார். இது நேர்மையாக, முறைமையாக காணப்படுகின்றது. 1999 இல் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை இல்லாவிடில் சுதந்திரக் கட்சி 10 ஆசனங்களுக்கும் குறைவானவற்றையே பெற்றிருக்கும். ஆனால் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையினால் 55 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை சிறப்பானது என்று கூறியிருந்த போது விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை விருப்பு வாக்கு முறைமை என குறிப்பிட்டிருக்கவில்லை. வாக்காளர்கள் தமது விருப்பத்திற்குரிய வேட்பாளர்களை வேட்பாளர்கள் பட்டியலிலிருந்தும் தேர்வு செய்யும் போது விருப்பு வாக்கு முறைமை சிறப்பானதாக அமைந்திருக்கின்றது. தொகுதிவாரி முறைமையின் கீழ் கட்சித் தலைமையே தமது விருப்பத்திற்கு அமைய வேட்பாளரை நியமிக்கின்றது.

உறுப்பினர்களையும் அவர்கள் நியமிக்கின்றார்கள். கட்சி செயலாளராலேயே உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் இப்போது நியமிக்கப்படுகின்றனர்.  ஆனால் புதிய முறைமையில்  ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுவதாக நான் நினைக்கின்றேன்.  எதேச்சாதிகாரத்தை மேவி ஜனநாயகத்தை சகல அரசியல் கட்சிகளும் பேணுவதற்கான நிர்ப்பந்தம் அங்கு இருக்கும். தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்வதிலிருந்து இது காணப்படும். 

கேள்வி: தற்போதைய முறைமையின் கீழ் தேர்தல் மிகவும் அமைதியானதாக நடைபெறும் என நீங்கள் நினைக்கின்றீர்களா? 

பதில்: விருப்பு வாக்கு முறைமை வன்முறையை அதிகரிக்கச் செய்யும் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. 2015 பாராளுமன்றத் தேர்தல் பழைய முறைமையில் இடம்பெற்றது. ஆனால் வன்முறை எதுவும் இடம்பெறவில்லை. வாக்காளர்களுக்கு அறிவூட்டுவதே சிறப்பான விடயமாகும்.

கேள்வி: விருப்பு வாக்கு முறைமையை இல்லாமல் செய்வது நல்ல விடயமென நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: எனது தனிப்பட்ட கருத்து பொருத்தமானதல்ல. ஏனெனில் சட்டத்தை உருவாக்குவோர் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை போதுமானதாக தீர்மானித்திருந்தனர்.  முன்னணி தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூட இந்த உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்.  இந்த விருப்பு வாக்கு முறைமையின் கீழ் நாங்கள் திருப்தியானதை கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இப்போது சிறப்பான தீர்வாக அமைவது அரசியலில் அதிகளவுக்கு பிரஜைகள் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் வர்த்தகமாக மட்டும் இது இருக்கக்கூடாது. பொதுப் பதவிகளில் தங்களை யார் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென தீர்மானிப்பதில் மக்கள் சம்பந்தப்படுவது அவசியமாகும். வாக்களிப்பது போன்றே அரசியலும் மக்களின் உரிமையாக இருக்கின்றது. நாட்டின் அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றாவிடில் புதிய தேர்தல் முறைமை செயற்படாது. நான் கனவு காண்பதாக சிலர் கூறக்கூடும். 

கேள்வி: குற்றவளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு  நியமனப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. அத்தகைய விடயங்களில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏதாவது தலையீடுகளை மேற்கொள்ளுமா?

பதில்: பாதாள உலகம் அல்லது குற்றவாளிகள் மக்களின் வாக்குரிமைகளில் குறுக்கிடுவதை தடுப்பது எமது கடமையல்ல. அவர்கள் தகைமையற்றவர்களாக அதாவது நியமனம் தாக்கல் செய்யப்படும் போது தகைமையுள்ளவர்களாக இருந்தால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது. குற்றவாளியும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டம் அனுமதிக்கின்றது.

தண்டனை பெற்ற 7 வருடங்களின் பின்னர் தேர்தல்களில் போட்டியிட சட்டத்தில் அனுமதியுள்ளது. ஒருவர் தீயவராக இருந்தால்  அவரை வாக்காளர்கள் நிராகரிக்க முடியும். தகைமையற்ற வேட்பாளர்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் உள்ளன. ஆனால் நியமனப் பத்திரங்களுக்கான கடப்பாடுகளை ஒருவர் நிறைவேற்றுவாராயின் அதற்கு பிறகு எதுவும் செய்ய முடியாது. 

கேள்வி:  நியமனப் பட்டியலுடன் பொலிஸ் அறிக்கையையும் கேட்பதற்கான சாத்தியப்பாடு உள்ளதா? இதன்மூலம் குற்றவாளிகளும் சட்டத்தை மீறுவோரும் தேர்தல்களில் போட்டியிடுவதை தடுப்பதை உறுதிப்படுத்த முடியுமல்லவா?

பதில்: அந்த விடயம் பாராளுமன்றத்திடமிருந்து வர வேண்டும். எம்.பி.க்களே அதனை தெரிவு செய்வது அவசியம். ஆனால், ஒருவர்  எந்தவொரு பாரதூரமான குற்றத்தை இழைத்திருக்கவில்லையெனவும் பாரதூரமான தண்டனை பெற்றிருக்கவில்லை எனவும் உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசி குறித்து நான் யோசிக்கின்றேன்.  அந்த தேவைப்பாடு தற்போது இல்லை.  அங்குலிமாலாவுக்கு புத்தபிரான் மன்னிப்பு அளித்திருந்தார். அங்குலிமாலா தன்னைத் தானே திருத்துவதற்கு தயாரான போது அவருக்கு மன்னிப்பளிக்கப்பட்டது. 1971  1989 கிளர்ச்சிகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் பாராளுமன்றத்தில் பணியாற்றியதையும் நாங்கள் அறிவோம்

கேள்வி: இந்தத் தடவை தேர்தலை நடத்துவதில் பாரிய தலையிடியாக இருக்குமென நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: தேர்தல்களை நடத்துவதே பாரிய தலைவலியாகும். 57,000 வேட்பாளர்கள் உள்ளனர். எனது அலுவலர்கள் அவர்களின் பெயர்களை பரிசீலிக்க வேண்டியுள்ளது. முகம்மட் என்ற பெயரை 6 வேறுபட்ட வழிகளில் உச்சரிக்க முடியும். மூன்று மொழிகளிலும் நியமனப் பத்திரங்களை அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அந்தத் தலைவலி இப்போது முடிவடைந்துவிட்டது. நாங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அச்சிடுவதற்காக அனுப்பியுள்ளோம்.

தேர்தல்கள் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றொரு தலையிடியாகும். நேற்று தபாலொன்றை நான் பெற்றிருந்தேன். மகரகமையை சேர்ந்த ஒருவர் முறைப்பாட்டை எழுதியிருந்தார். பெண் வேட்பாளர்கள் ஒருவரின் பதாகை மின்விளக்கு கம்பத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தனது வீட்டுக்கு முன்பாக அது இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும் அல்லது அந்தப்பகுதி தேர்தல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அல்ல இந்த விடயங்களை ஞுஞிண்டூ2018@ஞ்ச்ட்டிடூ.ஞிணிட் இதற்கு பாரப்படுத்த முடியும். ஆனால், எனக்கு தொலைபேசி அழைப்புகளையும் கடிதங்களையும் அனுப்புகின்றனர். 

கேள்வி: ஆக்கபூர்வமான பிரசாரத்தை எவ்வாறு நீங்கள் கையாளுகின்றீர்கள். உதாரணமாக கொழும்பு 10 பிராந்தியத்தில் பிரசார சுவரொட்டி ஒன்று காணப்படுகிறது. அங்கு வேட்பாளர் ஒருவர் வாக்களர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுகின்றாரே?

பதில்: அது ஆக்கப்பூர்வமானது அல்லது.அது ஏமாற்றுத் தனமானதாகும். அவர்கள் ஏமாற்றி தேர்தல்களை திருடப் பார்க்கின்றனர். அவர்கள் ஆக்கபூர்வமானதாக இருக்க முடியாது. அவர்கள் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினால் அவர்கள் வாழ்த்துகளை அனுப்புவதை சட்டத்தால் தடுக்க முடியாது. அல்லது வாக்காளர்களுக்கான துண்டுப் பிரசுரங்களை வீட்டுக்கு கொடுப்பதையும் தடுக்க முடியாது.

ஆனால் சுவரொட்டிகள், பெயர் பதாகைகள், அறிவுறுத்தல் பலகைகள் அல்லது ஏனையவை தடை செய்யப்பட்டவையாகும். எவரும் இதனை செய்வதற்கு அனுமதியில்லை. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். சிறை வைக்கப்பட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அபராதம் வெறும் 100 ரூபா மட்டுமே. மீறுவோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களை எச்சரிக்குமாறு நாங்கள் பொலிஸாருக்கு ஆலோசனை கூறியுள்ளோம்.

இது கவலையான விடயமாகும். இந்த மாதிரியான அரசியல் கலாசாரத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சட்டவிரோத தேர்தல் பிரசாரங்களை அகற்றுவதற்கு பல மில்லியன் ரூபாவை நாங்கள் செலவிடுகின்றோம். இந்த நிதி வறிய வரி செலுத்துவோரின் சட்டைப்பையிலிருந்தே வருகின்றது. 

கேள்வி: ஊடகத் துறையினர் பலர் இந்தத் தடவை தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். ஊடகத் தேர்தல்  வழிகாட்டல்களைப் பொறுத்தவரை இதுவொரு விவகாரமாக உருவாகின்றதா? 

பதில்:  ஊடகங்களின் தலைவர்களுக்கு நாங்கள் கடிதங்களை அனுப்பியுள்ளோம். தேர்தல்களுடன் தொடர்புபட்ட அவர்களின் செய்திகள், கட்டுரைகளை தேர்தல் முடிவுறும் வரை பிரசுரிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுள்ளோம். ஏனெனில் அது பக்கச்சார்பானதாக அமையும். இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரை போட்டியிடும் அவர்களின் ஊழியர்களுக்கு வேலையற்ற பிரபல்யத்தை வழங்க வேண்டாம் என்று கேட்டுள்ளோம்.

இதுவரை அவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் உள்ளனர். தேர்தல் ஆணைக்குழு விடுத்த வழிகாட்டல்களை இலத்திரனியல் ஊடகங்களும் பின்பற்றுகின்றன. ஒரு வேட்பாளர் அரச தொலைக்காட்சியைச் சேர்ந்தவராகவும் மற்றையவர் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்தவராகவும் உள்ளார். வட மாகாணத்தில் பிராந்திய செய்திப் பத்திரிகை ஊடகவியலாளர் போட்டியிடுகின்றார். அத்துடன்  நாங்கள் அதிகளவு அழுத்தத்தை கொடுக்க மாட்டோம் என்று ஊடகங்களில் தலைவர்களுக்கு உறுதியளித்திருக்கின்றோம்.

ஆயினும் அவர்கள் சகல வேட்பாளர்களுக்கும் சமமான பங்கினை கொடுக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் நான்கு அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்கள் 300 க்கும் அதிகமான சபைகளில் போட்டியிடுகின்றனர். வடக்கு, கிழக்கில்  முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன ஐ.ம.சு.மு/ சு.க, ஐ.தே.க., ஜே.வி.பி., ஸ்ரீல.பொதுஜன பெரமுன போன்றவற்றுடன் போட்டியிடுகின்றன. ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 64 சபைகளில் போட்டியிடுகின்றது. 

கேள்வி: புதிய தேர்தல் முறைமை தொடர்பாக போதியளவு விழிப்புணர்வு உள்ளதா? புதிய வாக்களிப்பு முறைமை தொடர்பாக வாக்காளர்கள் பரிச்சயமானவர்களாக உள்ளனரா? 

பதில்: நாங்கள் அதனை செய்ய வேண்டியுள்ளது.  வாக்குச் சீட்டில் கட்சியின் 
சின்னம், பெயரும் மட்டுமே இருக்கும். அத்துடன் சுயேச்சைக் குழுக்களின் விபரங்களும் இருக்கின்றன. விருப்பு முறைமை இருக்காது. வாக்காளர் தான் வாக்களிப்பதற்கான கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு மட்டுமே புள்ளடியிட வேண்டியிருக்கும். பின்னர் அவர் அதனை மடித்து  வாக்குப் பெட்டிக்குள் இடவேண்டும். 

TOTAL VIEWS : 677
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ath9t
  PLEASE ENTER CAPTA VALUE.