'ஒற்றை'யில் ஒரு அரசு 'ஒன்றுபட்ட' தில் பல அரசுகள்
2017-10-06 10:30:59 | General

நாடு "ஒற்றையாட்சி' அரசாக இருக்கின்றதென்று அரசியல் அமைப்பு பிரகடனப்படுத்துகின்ற போதிலும் "ஒருங்கிணைந்த நாடாக' இருக்க வேண்டுமென்ற கருத்தை சிலர் கொண்டிருக்கின்றனர்.

மக்களின் இறைமை அதிகாரத்தை  13 ஆவது திருத்தம் பாதிக்கின்றதென சட்டத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். காணி மற்றும் பொலிஸ் போன்ற அதிகாரங்களை பிராந்திய அரசாங்கங்களுக்கு ( மாகாணங்கள் ) பகிர்ந்தளிப்பதன் மூலம் இலங்கையின் முழுமைத் தன்மையை அது இல்லாமல் செய்வதாகவும் அழித்து விடுவதாகவும் சமஷ்டி அரசொன்றுக்கான வழியை திறந்துவிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 


"ஒற்றையாட்சி அரசு' மற்றும் "ஒன்று பட்ட அரசு' என்ற கருத்தீடுகள்  தொடர்பாக தர்க்கங்களும் விவாதங்களும் இடம்பெற்றுவரும் தருணத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியல் அமைப்பு நிபுணருமான மனோகர ஆர்.டி சில்வா சிலோன் டுடே பத்திரிகைக்கு தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்திருக்கின்றார். அரசாங்கம் கொண்டுவர முயற்சித்திருக்கும். அரசியல் அமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அவர் தங்களது கருத்தைத் தெரிவித்திருக்கின்றார். 


இலங்கை ஒன்றுபட்டதேசமாக விளங்கவேண்டுமெனவும் ஒற்றையாட்சி அரசாக இருப்பதிலும் பார்க்க ஒன்றுபட்டதாக இருக்கவேண்டுமென்றும் பிரிவினைவாதக் குழுக்கள் கருத்தைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார். இது சமஷ்டி அரசின் மற்றொரு வடிவமென அவர் கூறியுள்ளார். அவரின் பேட்டி வருமாறு; 


கேள்வி: "ஒற்றை' (Unitary) மற்றும் "ஒன்றுபட்ட' (United) என்ற கருத்தீடுகள் தொடர்பாக பாரிய விவாதம் இடம்பெறுகின்றது. சாதாரண பொதுமக்கள் இந்த இரு சொற்பதங்கள் தொடர்பாகவும் கண்டறிவது கடினமானதாகும். இவை தொடர்பாக தங்களால் விளக்கமளிக்க முடியுமா ? 


பதில்: எளிமையான வடிவத்தில் இதனை வைத்தால் "ஒற்றையாட்சி' யில் நீங்கள் ஒரேயொரு அரசாங்கத்தை காணமுடியும். ஆனால், "ஒன்றுபட்ட' நாட்டில் "பல அரசாங்கங்கள் இருக்கின்றன. "ஒற்றையாட்சி'யில் ஒரேயொரு மேலாண்மையுள்ள சட்டவாக்க சபையிருக்கும். அங்கு துணை அலகுகள் இருக்காது.

அதுவே இறைமையுடையதாகவிருக்கும். நிறைவேற்று அதிகாரமும் "ஒற்றையாட்சி' அரசில் மேலாண்மை பொருந்தியதாக இருக்கின்றது. ஒன்றுபட்ட அரசில் இறைமை பிரிக்கப்படுகின்றது. பல அரசுகளுக்கிடையில் அவை பிரிவடைகின்றன. ஒன்றுபட்ட அரசு என்பது சமஷ்டி அரசின் மற்றொரு சொற்பதமாகும். 


கேள்வி: "ஒற்றை'மற்றும்"ஒன்றுபட்ட' என்பதற்கிடையிலான தன்மையின் அடிப்படையில் இலங்கை போன்ற நாட்டுக்கு எது அதிகளவுக்கு பொருத்தமானது?


பதில்: நிச்சயமாக ஒற்றையாட்சி அரசே. இது ஒரு சிறிய நாடு. ஏற்கனவே, பிரிவினைக்கான இயக்கம் ஒன்று இருக்கின்றது. ஆதலால் ஒன்றுபட்ட அரசு கோட்பாட்டை ஊக்குவிக்கக் கூடாது. ஒன்றுபட்ட அரசானது சமஷ்டி. ஒன்றுபட்ட அரசுக்கு அங்கீகாரம் வழங்க முடியும். அதாவது ஏற்கனவே, பிளவுபட்டதாகவிருந்து மீள ஒன்றுபடுவதற்கு இருக்கும் நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க முடியும்.

இலங்கையில் எதிர்மாறான நிலையே உள்ளது. சமஷ்டியை பெற்றுக்கொள்வதற்கு விரும்புவோர் பிரிவினையை விரும்புகின்றனர். இப்போது அவர்கள் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்துடன் வந்திருக்கின்றனர். குறிப்பிட்ட சில குழுக்களின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பது தனியான நாட்டை தோற்றுவிப்பதாகும். ஆதலால் சமஷ்டி அல்லது ஒருமித்த நாடு கோட்பாடானது நிச்சயமாக பிரிவினைக்கு வழியமைப்பதாக அமையும். இங்கு இலங்கை "ஒற்றையாட்சி' அரசாக தொடர்ந்து இருக்கவேண்டுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை. 


கேள்வி: ஒருமித்த அரசு கருத்தீட்டுடன் அரசியல்வாதிகள் சிலரும் அரசியல் ரீதியான நோக்கங்களைக் கொண்ட தனிப்பட்டவர்களும் , இயக்கங்களும் விருப்பத்துடன் இருப்பதற்கான காரணம் குறித்து நீங்கள் எதனை நினைக்கின்றீர்கள்?


பதில்: சமஷ்டி அரசியலொன்றிற்கான பின்னணியை தோற்றுவிப்பதுடன் பிரிவினை வாதிகள் இருந்துவந்தனர். அதன் மூலம் ஒருநாள் ஈழத்தை அமைக்க முடியுமென்று எண்ணியிருந்தனர். பிரிவினை வாதிகளின் தந்திரோபாயம் சமஷ்டியை அல்லது ஒன்றுபட்ட தேச கருத்தீட்டை மேம்படுத்தி மத்திய அரசை பலவீனப்படுத்துவதாகும். அதனாலேயே  அரசியல் அமைப்பில் 13இல் இருந்து  19ஆவது  சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு முன்னர் கூட பிரிவினை வாதிகளின் பிரதான நோக்கமாக தனிநாடொன்று காணப்பட்டது. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் மட்டக்களப்பு பிரகடனம் என்பன தனியான ஈழதேசத்தை இலக்காகக் கொண்டதாகும். அந்த இயக்கங்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருக்கவில்லை. பிரிவினைக்கு எடுத்தடி வைக்கும் படிக் கல்லாக சமஷ்டி இருக்கின்றது.

எவ்வாறாயினும் நாட்டின் பிரிவினையை ஆறாவது திருத்தம் தடுக்கின்றது. ஆதலால், ஆறாவது திருத்தத்தின் பிரகாரம் இந்தக் குழுக்கள் நேரடியாக தனிநாடொன்றுக்கான கோரிக்கையை விடுக்க முடியாது. அதனாலேயே அவை தந்திரமாக ஒருமித்த தேசம் என்ற கருத்தீட்டை ஊக்குவிக்கின்றனர். சமஷ்டிக்கான மற்றொரு வடிவமாக அது அமைந்திருக்கின்றது. 


கேள்வி: "ஒற்றையாட்சி' கருத்தீட்டை பாதுகாப்பதற்கு அரசியல் அமைப்பில் ஏதாவது ஏற்பாடு உள்ளதா? 


பதில்: அரசியல் அமைப்பில்  6 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரிவினைக்கு சாதகமாக பேசுவதோ அல்லது பிரிவினையை ஊக்குவிப்பதோ குற்றமாகும். 


கேள்வி: அரசியல் அமைப்பின்  13 ஆவது திருத்தம் ஒன்றுபட்ட அரசுக்கான வழியை  ஏற்படுத்தியுள்ளதா?


பதில்: சமஷ்டி அல்லது ஒன்றுபட்ட அரசு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தம் அனுசரணை அளிக்கின்றது. அங்கு குறிப்பிட்ட சில ஏற்பாடுகள் உள்ளன. சமஷ்டியில் இருந்தும் நாட்டை பாதுகாப்பதாக  13 ஆவது திருத்தத்தில் சில குறிப்பிட்ட ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. இந்த ஏற்பாடுகள் காரணமாக பிரிவினை வாத நோக்கங்களுக்கு அதனால் செயலாற்ற முடியாது.

உதாரணமாக; பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை மாகாண முதலமைச்சர்களுக்கும் வட, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான அதிகாரத்தையும் பிரிவினைவாதிகள் விரும்பியிருந்தனர். ஆயினும் இந்த நோக்கங்களை நிறைவேற்ற முடியாது. அதேவேளை, ஒற்றையாட்சி அந்தஸ்தை பாதுகாப்பதற்கான குறித்த சில ஏற்பாடுகளும் உள்ளன.

ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது. மாகாண ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அரசியல் அமைப்பின் 154 பி2 இன் பிரகாரம் ஆளுநர் செயற்படவேண்டும். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு அமைவாக, ஆளுநர் செயற்பட வேண்டும். தவறான நடத்தை அல்லது இலங்கையின் நலன்களுக்கு முரணானதாக அவர்கள் செயற்பட்டால் மாகாண முதலமைச்சரை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்குமுள்ளது. 


ஆதலால், இந்த ஏற்பாட்டை இல்லாமல் செய்வதற்கு பிரிவினை வாதிகள் விரும்பியிருந்தனர். முதலமைச்சரினால் அவரின் தெரிவின் பிரகாரம் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென அவர்கள் யோசனை முன்வைத்திருந்தனர். இது இடம்பெற்றால் மாகாண சபைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது. 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் யோசனைகளும் இருக்கின்றன. ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான ஆதரவாக அது அமைந்திருக்கின்றன.

அதாவது  13 ஆவது திருத்தத்திலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்  காரணமாக தடையாக அமைந்திருக்கும் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக அமைந்திருந்திருக்கின்றன. 13 ஆவது திருத்தத்திலுள்ள அந்த ஏற்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு பிரிவினைவாதக் குழுக்கள் விரும்பியிருந்தனர். புதிய யோசனைகளை நீங்கள் கவனமாக ஆராய்ந்தால், அவற்றின் முழு நோக்கமுமே பாதுகாப்பு ஏற்பாடுகளை அகற்றுவதாகும். பாதுகாப்பு அகற்றப்பட்டால் அது பிரிவினைக்கு வழிவகுக்கும். 


கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதே  19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட நோக்கமென்று கூறப்படுகின்றது. 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அமுல்படுத்துவதில் உள்நோக்கமுள்ளதென்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா ?


பதில்: ஆம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு திரும்பவும் வருவதை தடுக்கக் கூடிய ஏற்பாடுகள் 19 ஆவது திருத்தத்திலுள்ளன. மேலதிகமாக 31(2) சரத்துகள்  நபரொருவர் ஏற்கனவே, இரு தடவை போட்டியிட்டிருந்தால்,  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதாக அமைந்திருக்கின்றன.

இந்த ஏற்பாடு மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கின்றது. ஏனெனில், மக்கள் முன்னாள் ஜனாதிபதியை நாட்டின் ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு விரும்பினாலும் கூட அவர்களால் அவரை நியமிக்க முடியாது. 1978 அரசியல் அமைப்பின் 31( 2) சரத்தின் பிரகாரம் நபரொருவர்  இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. எவ்வாறாயினும் அந்தத் தடை 18 ஆவது திருத்தத்தின் மூலம் அகற்றப்பட்டிருந்தது.

18 ஆவது திருத்தத்தை எதிர்த்த பலர் ஏற்கனவே, அதிகாரத்தில் இருந்து அதனை துஷ்பிரயோகம் செய்தவர், மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடியதாக திருத்தம் கொண்டுவரப்பட்டதால் அதனை ஆட்சேபித்துள்ளதாக கூறுகின்றனர். 


எனது தனிப்பட்ட அபிப்பிராயமானது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இப்போது அதிகாரத்தில் இல்லை. ஆனால், அவர் மீண்டும் போட்டியிட முடியும். எதிர்காலத்திலும் போட்டியிட முடியும். ஏனெனில், அவரிடம் துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகாரம் இல்லை.

நாட்டு மக்கள் அத்தகைய நபரொருவர் ஜனாதிபதியாக வர விரும்பினால் அதனைத் தடுத்தல் மக்களின்  ஜனநாயக உரிமை மீதான தாக்குதலாகும்.  19 ஆவது திருத்தத்தின் 91 ஆவது ஏற்பாட்டில் மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் தற்போதைய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமையை வைத்திருப்போர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான  ஏற்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

அதுவும் ராஜபக்ஷ குடும்பத்தை இலக்கு வைத்ததாகும்.  முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ சகோதரர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையை வைத்திருக்கின்றார்கள் என்பது அறியப்பட்ட விடயமாகும். 


கேள்வி: இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருப்பதுடன், சிறுபான்மை இனக் குழுவொன்றை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக  இருக்கின்றது. இந்நிலையில், கூட்டு எதிரணியை உண்மையான எதிர்க்கட்சியாக அரசாங்கம் அங்கீகரித்திருக்கவில்லை?


 பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக இந்த அரசாங்கம் நியமித்திருக்கின்றது. எதிர்காலத்தில் அரசாங்கமொன்றை  அமைக்கக் கூடிய ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென்ற கருத்தை அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் பலர்  கொண்டிருக்கின்றனர்.

16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொந்தமாக அரசாங்கமொன்றை அமைக்க முடியும் என்பதை எதிர்வுகூருவது கடினமானதாகும். இங்கு  இந்த விடயம் அரசியலமைப்பு ரீதியானதாக அல்லாததாகவும் ஜனநாயக ரீதியாக அமையாமலும் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை ஜனநாயக ரீதியற்றதாகும்.

17 மற்றும் 19 திருத்தங்களில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புக் குழுவின் உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவருக்கு அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்களை தெரிவு செய்வதற்கான அதிகாரங்கள் உண்டு. அத்துடன், விசேட ஆணைக்குழுக்கான உயர்பதவிகளை நியமிப்பதற்கான அதிகாரங்களும் உள்ளன.அவர் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், அவர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றார். இது நல்லாட்சி அல்ல. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை நியமித்தும் கூட்டு எதிரணியை அங்கீகரிக்காமலும் அரசாங்கம் பெரும்பான்மை இனக் குழுவின் ஜனநாயக உரிமைக்கு முரண்பாடாக செயற்படுகின்றது. 


கேள்வி: 2000 இல் அரசியல் அமைப்பு சட்ட மூலமொன்றை கொண்டுவருவதற்கு முன்னாள்  ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்திருந்தார். இந்த அரசாங்கமும் அதனைக் கொண்டுவருகின்றதா?

 
பதில்: ஆம். ஆனால், ஜனாதிபதி சந்திரிகா கொண்டுவர விரும்பியிருந்ததிலும் பார்க்க இது மோசமானதாக இருக்கும். 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நகல் வரைபு சமஷ்டிக்கு அனுசரணையாக இருந்தது. இந்தவருடம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கொண்டுவந்ததும் ஒருமித்த நாடென்ற இலச்சினையின் கீழ் சமஷ்டி அரசொன்றுக்கு அனுசரணை வழங்குவதாகவுள்ளது. 

TOTAL VIEWS : 1323
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bxer4
  PLEASE ENTER CAPTA VALUE.