வளைகுடா நாடுகளுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்படும் இலங்கையின் யுத்த விதவைகள்
2017-08-10 10:13:48 | General

அமந்த பெரேரா

கடந்த மார்ச்சில் கொழும்பிலிருந்து மஸ்கட்டுக்கு மதுகுலசிங்கம் நேசமலர்  விமானத்தில் பயணித்த போது தனது கையில் வைத்திருந்த அனுமதிச் சீட்டு தனது சிறப்பான வாழ்க்கைக்கான தங்கமென அவர் நம்பியிருந்தார். பல தசாப்தகால யுத்தத்தின் போது சிறப்பான வாழ்க்கைக்கான தருணமென அவர் நினைத்தார். யுத்தத்தில் அவரது கணவர் உட்பட சகலவற்றையும் இழந்திருந்தார்.


இலங்கையின் முன்னாள் போர் வலயத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இந்த விதவைப் பெண் மத்திய கிழக்கு நாடான ஓமானில் செல்வந்தக் குடும்பமொன்றில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்படுவார் என அவருக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு வசதியான அறை, கண்ணியமான வேலை மற்றும் மாதாந்தம் 30,000 ரூபா ஊதியம் கிடைக்குமெனத் தெரிவிக்கப்பட்டது. நேசமலருக்கு இருந்த கடனைச் செலுத்த அத்தொகை போதுமானதென கருதப்பட்டது. 


ஆனால், நேசமலரின் கனவு விரைவில் திகில் நிறைந்ததொன்றாக மாறிவிட்டது. மஸ்கட்டிலிருந்து பல மைல் தூரத்திலுள்ள காற்றோட்டமில்லாத மங்கிய வெளிச்சமுள்ள அறைக்குள் ஏனைய பெண்களுடன் தானும் அடிமையாக வைக்கப்பட்டதை அவர் அறிந்து கொண்டார். தினமும் அவர் கொண்டு செல்லப்படுவார். வெவ்வேறு வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவார். பின்னர் இரவில் மீண்டும் கொண்டுவரப்பட்டு அந்த அறையில் அடைக்கப்படுவார்.


"அங்கு எம்மில் 15 பேர் இருந்தோம்.எமக்கு ஒருபோதும் சம்பளம் தருவதில்லை. இறுதியாக இலங்கை அரசாங்கம் தலையிட்ட பின்னர் நாங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம்' என்று மூன்றுபிள்ளைகளின் தாயான அவர் கூறினார். 2001 இல் அந்தப் பெண்ணின் கணவர் காணாமல் போயிருந்தார். 


யுத்த அனுபவத்தை பெற்றிராதவர்கள் இளம் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வாறு கடினமானது என்பதை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். யுத்த காலத்திலும் நாங்கள் துன்பப்பட்டோம். இப்போதும் துன்பப்படுகிறோம் என்று யாழ்ப்பாணத்திலுள்ள தனது வீட்டிலிருந்து அப்பெண் கூறியுள்ளார். சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஓமான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் ஆசிய மற்றும் ஆபிரிக்க பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காக்கப்படுவது தொடர்பாக பொதுவாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், நேசமலரின் கதையானது இலங்கையில் அங்கீகரிக்கப்படாத தன்மை இன்னமும் அதிகரித்து வருவதை முன்னிறுத்துகின்றது. ஆயிரக்கணக்கான போர் விதவைகள் இலங்கையில் உள்ள நிலையில் அவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் குறைவாக காணப்படுன்றன. இதனால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கொண்டு செல்வோர் அவர்களை அடிமைகளாக விற்கப்படுவதற்கான நிலைமை ஏற்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தகவலின் பிரகாரம் வட பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 2015 மற்றும் 2016 இல் வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களாக தொழில் வாய்ப்பை நாடியிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.  அவர்களில் பலர்  பெண்களை குடும்பத் தலைவர்களாக கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 2011 இல் 300 பேர் மட்டுமே சென்றிருந்ததாக மத்திய வங்கித் தகவல்கள் கூறுகின்றன.  

வீட்டுப் பணியாளர்களாக வருடாந்தம் ஒரு இலட்சம் இலங்கைப் பெண்கள் செல்கின்றனர். அவர்களுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவானதாகும் என்று  யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட தன்னார்வ அமைப்பான அபிவிருத்திக்கான  சமூக அமைப்புகளின் கட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.செந்தூரராஜா கூறியுள்ளார்.


சில வருடங்களுக்கு முன்னர் வீட்டுப் பணியாளர்களாக வடக்கைச் 
சேர்ந்த எவரும் செல்வது குறைவானதாகும். இந்நிலையில் இந்தத் தொகை முக்கியமானதாக காணப்படுகிறது. 


90,000 யுத்த விதவைகள்


யுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்கள் கடந்துள்ளன. 2009 இல் முடிவுக்கு வந்த போரில்1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருந்தனர். சுமார் 65,000 பேர் காணாமல் போயுள்ளனர். பல இலட்சக் கணக்கானோர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.

வடக்கில் பொலிஸ் கட்டமைப்பு அபிவிருத்திக்காக மில்லியன் கணக்கான டொலர்களை அரசாங்கம் செலவிடுகின்ற போதிலும் தமது கணவன் மார் தந்தை மார் சகோதரர்களை யுத்தத்தில் இழந்த 90,000 பெண்களுக்கு எதுவும் அதிகளவில் செய்யப்பட்டிருக்கவிலையென்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.


பால்நிலை சமத்துவத்தில்  மிகவும் அபிவிருத்தி குன்றிய மாகாணங்களில் ஒன்றாக வட மாகாணம் விளங்குகின்றது. தேசிய மட்டத்தில் வேலையாட் படையில்  பெண்களின் தொகை 35 வீதமாகக் காணப்படுகின்றது. ஆனால், வடக்கைப் பொறுத்தவரை அது 21% ஆகும். பிரசவகால இறப்பு வீதம் 30 ஆகும். தேசிய ரீதியில் 22% ஆக அது காணப்படுவதை அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கிலுள்ள 250,000 குடும்பங்களில் 1/5 இற்கும் அதிகமானவற்றுக்கு நேசமலர் போன்ற பெண்கள் தலைமை தாங்குவதாக ஐ.நா. மதிபீடுகள் தெரிவிக்கின்றன.  குடும்பத்திற்கு உழைத்துக் கொடுப்பவர்களாக இந்த போர் விதவைகள் காணப்படுகின்றனர். ஜீவனோபாயத்துக்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றன. குடும்பத்தில் 4 பேரை பராமரிக்க வேண்டிய நிலைமை அந்தப் பெண்களில் பலருக்கு உள்ளது.

கடன் வழங்குவோரிடம் கடன் பெறும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால்  ஆட்கடத்தல் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் சுரண்டல்களுக்கு அவர்கள் இலக்காகும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் மிகவும் நலிந்த நிலையில் உள்ளனர். அதனால் அவர்களுக்கு எளிதில் நம்பிக்கையூட்டி  அவர்கள் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கின்றது என நட்பு மற்றும் பரிவுக்கான தன்னார்வ சங்கத்தின் தலைவர் ரவீந்திர டி சில்வா கூறியுள்ளார். இந்த அமைப்பு அதிகாரிகளுடன் இணைந்து நேசமலரை மீட்பதற்கு செயற்பட்டிருந்தது. 


ஆட்சேர்ப்பு செய்யும் முகவரமைப்புகள் உள்ளூர் கிராமவாசிகளை பணிக்கு அமர்த்துகின்றன. அவர்கள் கிராமவாசிகளுக்கு நன்கு அறிந்தவர்களும் நம்பிக்கையுடையவர்களுமாக இருக்கின்றனர்.  அவர்கள் மூலமே கடன்படும் நிலைமை வறிய பெண்களுக்கு ஏற்படுகின்றது.

இந்நிலையில் கௌரவமான தொழிலையும் தாராளமான சம்பளத்தையும் பெற்றுத் தருவதாக அவர்கள் உறுதியளிக்கின்றனர். செல்வந்த நாடொன்றில் சிறப்பான வாழ்வுக்கான பிரதிமையை ஏற்படுத்துகின்றனர். சகல பெண்களும் சில ஆவணத்தை நிரப்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியுள்ளது.

ஆனால், அந்த ஆவணத்திலுள்ள நிபந்தனைகள் குறித்து அவர்கள் அறியாதவர்களாக அதிளவுக்கு காணப்படுகின்றனர்.  இது பிணை அடிப்படையிலான ஒப்பந்தத்தின் தன்மையைக் கொண்டதாகும். ஆட்திரட்டலை மேற்கொள்ளும் முகவரமைப்புகள் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கருதுகின்றனர் என்று சில்வா கூறியுள்ளார்.


நேசமலரை ஓமானுக்கு முகவரமைப்பு ஒன்று அனுப்பியிருந்தது. அந்த அமைப்பு அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. தொழில் வழங்கியவர் 3 இலட்சம் ரூபாவை நேசமலருக்கு வழங்கியிருப்பதாகவும் நேசமலர் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டால் அந்தப் பணத்தை திரும்ப செலுத்த நேரிடும் என்றும் அவருக்கு கூறியுள்ளது.

நேசமலர் அதிகளவுக்கு அதிர்ஷடசாலியாக இருந்துள்ளார். பல வாரங்கள் வைக்கப்பட்டிருந்த பின்னர் அதிகாரிகளினால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றொரு பெண்ணின் உறவினர் ஊடாக நேசமலரின் துன்பத்தை இலங்கை அதிகாரிகள் அறிந்து கொண்டதையடுத்து அவரை மீட்டிருந்தனர்.


ஆயினும்  பாதிக்கப்பட்ட பலர் காப்பாற்றப்படவில்லை. அல்லது அவர்கள் திரும்பி வருவதற்கு பணத்தைச் செலுத்த முடியாத நிலைமை உள்ளது. இதனால் பல வருடங்களுக்கு அவர்கள் சுரண்டலுக்கு இலக்காகியுள்ளனர். பல சம்பவங்களில்ஆட்சேர்ப்பு செய்யும் முகவர்கள் அல்லது தொழில் வழங்குவோர் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.


சிரச் சேதம், இரும்புத் துண்டால் சுடுதல்


2013 இல் இலங்கைப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டிருந்தார். அவரின் பராமரிப்பில் இருந்த குழந்தை இறந்ததால் அவரின் கவனக்குறைவால் அச்சம்பவம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2010 இல் சவூதி அரேபியாவில் இருந்து 50 வயதுடைய பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார்.

அவர் இரும்பு கம்பியால் சுடப்பட்டிருந்ததையும் அவரின் தோலுக்குள் ஆணிகள் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டிருந்தனர். உடல் மற்றும் உள ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகள் பொதுவாக காணப்படுவதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். வெட்கம் மற்றும் வடு என்பவற்றுக்கு அஞ்சுவதால் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வல்லுறவு குறித்து கதைப்பதற்கு பெண்கள் தயங்குகின்றனர்.  

பாதிக்கப்பட்டோர் முன்வந்து விடயங்களைத் தெரிவிக்காவிடில் ஆட்களைக் கொண்டு செல்வோர் அல்லது வெளிநாட்டில் தொழில்வாய்ப்புகளை வழங்குவோரை விசாரணை செய்து ஆட்திரட்டல் செய்யும் நிறுவனங்களின் பதிவை இரத்துச் செய்ய முடியாதிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவரமைப்புகள் ஊடாக செல்லும் அநேகமான பெண்கள் புறப்படுவதற்கு முன் 40 நாட்களுக்கு வீட்டைப் பராமரிக்கும் பாடநெறியை  பூர்த்தி செய்திருக்க வேண்டுமென அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர்களின் விருப்பத்துக்கு எதிராக எவராவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு ஒன்றை பெற்றுக் கொண்டால் மட்டுமே அரசாங்கம் தலையிடுகிறது. நேசமலரின் விடயத்தில் இந்தப் பெண்களைத் திரும்ப கொண்டு வருவதை நாங்கள் உறுதிப்படுத்தியிருந்தோம். அதேபோன்று ஏனைய விடயங்களும் இருந்தால் நாங்கள் என்ன செய்வது என்பது குறித்து பார்ப்போம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தோம்சன் ராய்ட்டர்ஸ் பவுன்டேஷனுக்கு கூறியுள்ளார். 


வடக்கின் வறுமைநிலை குறித்துத் தான் அறிந்திருப்பதாகவும் போர் விதவைகள் சுரண்டலுக்கு இலக்காவதற்கு இது வழியமைப்பதாகவும் அவர் கூறியுள்ளதுடன் அந்தப் பகுதியிலிருந்து ஆட்களை கொண்டு செல்வோர் குறித்து அதிகாரிகள் மேலதிக கவனத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை யுத்தத்தில் தப்பிப் பிழைத்தோர் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்பவும் வருமானத்துக்காக உழைக்கவும் அதிகளவு ஆதரவு தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகள் வர்த்தகத் துறையினர் மேற்கொண்டு வரும் முன்முனைப்புகள் குறைவாக இருப்பதாக சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கை தொடர்பான ஆய்வாளர் அலன் கீனன் கூறியுள்ளார். 
இந்த நிராதரவான நிலைவரம் தொடர்பாக தொடர்ச்சியாக அல்லது செயற்பாட்டுத் திறனுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. வட, கிழக்கில் பெண்கள் பலர் இந்த நிலைவரத்தில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நேசமலரைப் பொறுத்தவரை அவர் வீட்டுக்குத் திரும்பி வந்த பின்னர் வாழ்க்கை மேலும் மோசமடைந்துள்ளது. அவரின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அவரின் சமூகத்திலிருந்து  அவர் கறையை எதிர்கொண்டுள்ளார். ஓமானில் பாலியல் தொழிலாளியாக அவர் இருந்தார் என அவரின் சமூகத்தவர்கள் அவரை குற்றம் சாட்டுகின்றனர். 


“வெளியில் செல்வதற்கு வெட்கப்படுவதாக எனது பிள்ளைகள் கூறுகின்றனர். என்னாலும் வெளியே செல்ல முடியவில்லை. ஏனெனில் ஆட்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். அல்லது நான் அவர்களுக்கு கடன் பட்டுள்ளேன் என்று நேசமலர் கூறியுள்ளார். பணம் உழைத்து இந்தக் கடனை செலுத்துவதன் மூலமேஇந்நிலைமையிலிருந்தும் மாற முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார். 


தோம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் 

TOTAL VIEWS : 1086
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ux5zs
  PLEASE ENTER CAPTA VALUE.