மாகாணங்களை இணைக்க சு.க. கடும் எதிர்ப்பு; ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யோசனை தெரிவிப்பு
2017-09-11 11:27:38 | General

அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தமது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 6) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவிற்கே அந்த யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

ஆகஸ்ட் 8 இல் வழிகாட்டல் குழுவினால் சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட, இற்றைப்படுத்தப்பட்ட இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதே இத்தகைய யோசனைகளாகும். 


இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறிசேனா ஆதரவு அணியினர் 8 பக்க ஆவணமொன்றினை இது தொடர்பாக சமர்ப்பித்திருந்தனர். குழுவின் வெளிவரவிருக்கும் அறிக்கையில் இணைப்பாக, வழிகாட்டல் குழு பதிலை பிரசுரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

சிங்களத்திலுள்ள அந்த ஆவணத்தில் நிமால் ஸ்ரீபால டி சில்வா, சுசில் பிரேமஜெயந்த, டிலான் பெரேரா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர். எந்தவொரு அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொண்டாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தக்கவைக்கப்பட வேண்டுமென்பதே சிறிசேன சார்ப்பு சு.க. குழுவினரால் கோரப்பட்டிருந்தது. "நிறைவேற்று' என்ற தலைப்பில் ஆவணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு அதற்கான காரணத்தை விபரிக்கின்றது. 


"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கிவிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அபிப்பிராயமானது இன்றைய தினத்தில் அந்த விவகாரம் புத்திசாலித்தனமாக இருக்கவில்லையென்பதாகும். உலகத்தின் பலநாடுகளில் பலதரப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இடம்பெறுவதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, ஜனாதிபதியொருவர் நேரடியாக பொதுமக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட வேண்டுமென்று சுதந்திரக் கட்சி நம்புகின்றது.

நாட்டின் ஒற்றையாட்சி முறைமையைப் பாதுகாக்க குறிப்பிட்ட சில அதிகாரங்களுடன் ஜனாதிபதி இருக்க வேண்டுமெனவும் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும்  விசேடமாக மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படும் சூழ்நிலையில் நாட்டின் உறுதித்தன்மையைப் பாதுகாக்கவும்  ஒற்றையாட்சி முறையைப் பேணவும் குறிப்பிட்ட சில அதிகாரங்களைக் கொண்டவராக ஜனாதிபதி இருக்க வேண்டும்.

ஆதலால் நாட்டிலுள்ள ஒவ்வொரு இனக் குழுமமும் குறுகிய இன, மத பிரச்சினைகள் இல்லாமல் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதன் மூலம், அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதுடன், ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் உறுப்பினராக உருவாகும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றது.

இந்த விடயம் தேசிய நல்லிணக்கத்திற்கான நடைமுறைச் சாத்தியமான முறைமையாகவும் உருவாகின்றது. தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராகவும் அமைச்சுப் பதவிகளை வகிப்பதற்கான வாய்ப்பை  அதாவது தேசிய பாதுகாப்பு, முப்படைகள், பொலிஸார் தொடர்பான அமைச்சுப் பதவிகளையும் வகிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதற்கு திட்டவட்டமாக அவர் உறுதிப்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும். 


"நகல் வரைபின் (10 ஆவது பந்தி) விடயத்திற்கு நாங்கள் இணங்குகிறோம். பாராளுமன்றத்தின் முதல் 4 1/2 வருடங்களுக்கு அதனைக் கலைக்க முடியாது என்பதற்கு நாங்கள் இணங்குகிறோம். அதாவது விசேடமான சூழ்நிலையைத் தவிர அதற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடியதாக இருக்கும் சூழ்நிலைகள் எவையென்பது குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டும். எவ்வாறாயினும் பொதுமக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினரால் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற கருத்தீட்டை அமுல்படுத்தும் அதேவேளை, ஜனநாயக ரீதியான அரசங்கம் ஒன்றை அகற்றுவதற்கு பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கான வாய்ப்புக்களும் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசியலமைப்பு அமைய வேண்டும்.'


"அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த வேண்டுமெனவும் அதேவேளை, இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையும் 30 ஆக அரசியலமைப்பின் மூலம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் சுதந்திரக் கட்சி விபரிக்கின்றது. அமைச்சுகள் நுட்பரீதியாக பிரிக்கப்பட வேண்டும். அமைச்சப் பொறுப்புகள் விடயதானத்துடன் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.'


"பிரதமர் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட வேண்டும். பிரதமரைத் தெரிவு செய்வதற்கான ஏனைய யோசனைகள் பொருத்தமற்றவையாக உள்ளன. அவை அகற்றப்பட வேண்டும்' 
"நிறைவேற்று அதிகார' ஜனாதிபதி தொடர்பாக சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு நிறைவேற்று அதிகாரம் என்ற தலைப்பின் கீழ் விபரிக்கப்பட்டுள்ளது.

அதில் சில முக்கியமான அரசியல் விவகாரங்களும் இடம்பெற்றுள்ளன. அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், 2020 இல் ஜனாதிபதித் தேர்தலின்போது 2 ஆவது தடவையாக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார். அவரின் பிரதான போட்டியாளராக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க விளங்குவார்.

அதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய மக்களாணையைக் கோருவது தொடர்பான முக்கியமான விடயம் தொடர்பாக சு.க.வின் தலைமைத்துவம் குறைத்து மதிப்பிடுவதாக ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 


இதனாலேயே தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடு குறித்து மேலும் கலந்துரையாடப்படுவதற்கு சு.க. நாடுகின்றது. அரசாங்கம் 4 1/2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் வரை பாராளுமன்றத்தைக் கலைப்பதை தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடு தடை செய்கின்றது.

இதனாலேயே எத்தகைய சூழ்நிலைகளில் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமென்பது குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டுமென சு.க. கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதி சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கையெடுப்பதற்கு அவருக்கு இப்போது அரசியலமைப்பு ரீதியாக வலு ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
சு.க. யோசனைகளில் முக்கியமானவை சில; 


அரசியலமைப்புப் பேரவை


அரசியலமைப்புப் பேரவை செயற்பட்ட வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்புப் பேரவையின் உள்ளடக்கம் தொடர்பாக ஆய்வொன்று திரும்பவும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்ற அபிப்பிராயத்தை சு.க. கொண்டிருக்கின்றது. தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் கீழ் நிறைவேற்றப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட செயற்பாடு எவ்வளவு தூரத்திற்கு அமைந்திருந்தது என்பது மீளாய்வு செய்யப்பட வேண்டும். ஆதலால் அரசியலமைப்புப் பேரவையின் உள்ளடக்கம் தொடர்பான நியமன நடவடிக்கைகள் குறித்து மீள சிந்திக்கப்பட வேண்டியுள்ளது. 


அதிகாரப் பகிர்வுக்கான விதிமுறைகள்


வரைபுக் குழுவினால் பிரேரிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கும் யோசனைக்கு சு.க. இணக்கப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எவ்வாறாயினும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் இன உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதற்கு இணங்க முடியாதென சு.க. தெரிவித்திருக்கின்றது. அவ்வாறு அமைந்தால் இனங்களுக்கிடையிலான அமைதியின்மைக்கு வழிவகுக்குமெனவும் இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்குத் தடையாக அமையுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிகாரப் பகிர்வுக்கான பிரதான அலகு மாகாணமாக இருக்க வேண்டுமெனவும் 13 ஆவது திருத்தத்தை அதிகாரப் பகிர்வாக அமுல்படுத்துவதற்கான இணக்கப்பாடு இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அலகானது மாகாணமாகவே இருக்க வேண்டுமெனவும், 2 அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்படுவதாக இருக்கக் கூடாதெனவும் அவற்றை இணைத்து மாகாணமொன்றை அமைக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் அத்தகைய இணைப்புத் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வாய்ப்பும் இருக்குமானால்,  அதனை அதாவது மாகாண சபைகளுக்கான சட்டங்களில் அவை இருக்குமானால், அவை அகற்றப்பட வேண்டுமெனவும் மக்கள் சபை அலகுகளை உருவாக்குவது தொடர்பான யோசனை தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட வேண்டுமெனவும் சு.க. யோசனையை முன்வைத்துள்ளது.


மாகாணங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு


மாகாணங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட தொன்றாகும். ஆனால், ஒன்றுபட்டு தீர்மானங்களை எடுப்பதோ அல்லது மாகாணங்களை இணைப்பதோ இடம்பெறக் கூடாது.


பிரிவினைக்கு எதிரான பாதுகாப்பு


ஒற்றையாட்சி முறைமை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். நாடு பிரிக்கப்பட, பிளவுபடுத்த முடியாததாக இருக்கின்றது என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். நாட்டின் ஒரு பகுதியை தனி அரசாக பிரகடனப்படுத்துவது பாரதூரமான குற்றமெனப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். தீவிரவாத அதாவது இன, மத அடிப்படையிலான பிரிவினைவாத எண்ணப்பாடுகள் தடைசெய்யப்பட்டிருப்பது  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட வேண்டும்.


ஆளுநர்


வைபவ ரீதியான செயற்பாடுகளை மட்டுமே ஆளுநர் கொண்டிருக்க வேண்டும் என்ற யோசனைக்கு சு.க. இணங்கவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். மாகாண சபை செயற்படாத நிலைமையின் போது ஆளுநர் செயற்படுவதாக அமைய வேண்டும்.

அத்துடன் சட்டம், ஒழுங்கு சீர்குலையும் போதும் அமைதியான சூழல் தேவைப்படும் சூழ்நிலையிலும் அவற்றைப் பேணுவதற்கு அல்லது மத்திய அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தவொரு முயற்சியாவது எடுக்கப்பட்டால், அதனைக் கையாள்வதற்கும் ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். உடனடியாக செயற்படக் கூடியதாக ஆளுநருக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை மீறுவதாக அல்லது பிரிந்து செல்வதாக பிரதிநிதித்துவப்படுத்தும்போது அல்லது சுயாட்சிப் பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தப்படும்போது அதற்கான முயற்சிகளை மாகாண சபையோ அல்லது முதலமைச்சர் ஒருவரோ மேற்கொண்டால் அவற்றை நிகராகரிப்பதறகு உடனடியாக செயற்படுவதற்காக அதிகாரத்தை அரசியலமைப்பு ரீதியாக ஆளுநர் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட மாகாண சபை தீர்மானங்களின் அரசியலமைப்பு ரீதியான தன்மை பற்றிய நிலைப்பாடு உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும். 


தேசிய பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு  நோக்கத்திற்காக தேவைப்பட்ட காணி


இதனுடன் தொடர்புபட்ட பந்தி (17) திருத்தப்பட வேண்டும். "பிரதமரின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டதாக அல்லது அதனுடன் அல்லது அதனுடனில்லாமல் ஜனாதிபதி அது தொடர்பாக அவரின் ஆலோசனையில் திருப்தியடைந்தபோது' என்று திருத்தப்பட வேண்டும். 


பந்தி (18) ஆனது பிரதமரின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமென்பது அகற்றப்பட வேண்டியுள்ளது. தேசிய பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கான நிலம் தொடர்பாக எடுக்கப்படும் நிறைவேற்று அதிகாரத் தீர்மானங்கள் எந்தவொரு நீதிமன்றத்திற்கும் சவால் விடுக்கப்படுவதாக அமையக் கூடாது என்பது சு.க. வின் அபிப்பிராயமாகும்.


2 ஆவது சபை


2 ஆவது சபையை அமைப்பது தொடர்பாக கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு உள்ளது. அதற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஜனநாயாக ரீதியாகவும் பொதுமக்களின் இணக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். அந்த உறுப்பினர்கள் நன்கு அறியப்பட்டவர்களாகவும் பொதுமக்கள் மத்தியில் கௌரவம் மிக்கவர்களாகவும் அவர்களின் தொழில்சார் திறமையை வெளிப்படுத்தியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் இணங்குகிறோம்.

2 ஆவது சபையானது 36 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்பது சு.க. வின் நிலைப்பாடாகும். அவர்களில் மாகாண 
சபையைப் பிரநிதித்துவப்படுத்துபவர்களும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து 19 பேரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 2 ஆவது சபையிலிருந்து இரு உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிப்பது பொருத்தமானதாக அமையும்.


பொதுமக்கள் பாதுகாப்பு


அவசரகால நிலைமையை அமுல்படுத்தும்போது பின்வருமாறு அமைய வேண்டும்: ஒன்று ஜனாதிபதி; இரண்டு இந்தப் பத்தியில் "பிரதமர்' என்ற வார்த்தை ஜனாதிபதியென திருத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவர்களின் தீர்மானங்கள் நீதிமன்ற மீளாய்விற்கு இலக்காகக் கூடாது. அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தும்போது, பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இல்லை.

அதாவது மாகாணமொன்றின் ஆளுநரினால் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்படும்போது அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது நடைமுறையில் இல்லை. எமது நிலைப்பாடு, இது தேவையில்லையென்பதாகும். பிரதமரின் ஆலோசனையுடனோ ஆலோசனை இல்லாமலோ ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்பதாகும். அத்தகைய பிரகடனம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு இலக்காகக் கூடாது. அல்லது நீதிமன்ற மீளாய்வுக்கும் உட்படக் கூடாது.


பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துதல்

மாகாண சபைத் தேர்தல்களின் பெறுபேறுகள் மற்றும் அவற்றின் பின்னணி என்பனவற்றை மீளாய்வு செய்வதன் மூலம் நடைமுறை ஒன்றைத் தயார்ப்படுத்த வேண்டுமென சு.க. வலுவாக நம்புகிறது. அதாவது, அரசியலமைப்பு ரீதியாக பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தவும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு அதிகளவுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டுமென்றும் சு.க. கருதுகின்றது.

மேலும், பெண்கள் பிள்ளைகளின் உரிமைகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஏற்பாடொன்று அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும். இந்த நடைமுறையுடன் தொடர்புபட்ட விடயங்கள் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து சு.க. மேற்குறிப்பிட்ட ஆவணத்தைக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவானதாகும். அதாவது பிரதமரின் வகிபாகத்தைக் குறைப்பதற்கு அக்கட்சி நாடுகின்றது. இதேவேளை, தனது யோசனைகளை கூட்டுஎதிரணியும் சமர்ப்பித்திருக்கின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைப்பான "எலிய' அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிராக செயற்படப்போவதாக சூளுரைத்துள்ளது. 


சண்டே ரைம்ஸ்

TOTAL VIEWS : 781
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ovmm3
  PLEASE ENTER CAPTA VALUE.