மின்தாக்க மரணங்களில் இருந்து பாதுகாப்பளிக்க பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை; 13 அம்பியர் செவ்வகமுனை பிளக்குகள் மற்றும் சொக்கெற் அவுட்லெட்கள் தேசிய நியமமாக அங்கீகாரம்
2017-08-10 11:49:03 | General
எஸ். ஹரியதர்ஷனி
 
இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறைக்கான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குறுத்துநராக தொழிற்பட்டு வரும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இலங்கையர்களின் பாதுகாப்பான மின் பாவனை மற்றும் மின் நுகர்வுசார் விவகாரங்களுக்கும் முன்னுரிமை அளிக்கின்றது.
 
இலங்கையில் நிகழும் மின்தாக்க மரணங்களை கணிசமான அளவு குறைப்பதே இதன் நோக்கமாகும். சர்வதேச நியமச் சுட்டிற்கமைய ஒரு மில்லியன் 
சனத்தொகைக்கு ஒரு மின்சார இறப்பே அதிகபட்ச அளவாக கணக்கிடப்படுகின்றது. இதற்கமைய இலங்கையானது 20 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நாடு என்ற ரீதியில் 20 மின்தாக்க மரணங்களே என்ற தேசிய அளவு கணக்கிடப்பட்டுள்ளது.
 
இதனை 2020 ஆம் ஆண்டினுள் நடைமுறைப்படுத்துவதே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நோக்கமாகும். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பல செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
 
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்தாக்க மரணங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் 13 அம்பியர் செவ்வகமுனை பிளக்குகள் மற்றும் சொக்கெற் அவுட்லெட்களை தேசிய நியமம் ஆக்குவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தது. அமைச்சரவையானது இதற்கான அனுமதியை கடந்த 2016 ஆகஸ்ட் 16 ஆம் திகதி வழங்கியது.
 
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 2017 ஆகஸ்ட் 16 ஆம் திகதிக்குப் பின் 13 அம்பியர் செவ்வக முனை வடிவிலான பிளக்குகள் மற்றும் சொக்கெற் அவுட்லெட்களுக்கான உற்பத்தி மற்றும் இறக்குமதியானது முற்றாகத் தடைசெய்யப்படும்.
 
 நிதியமைச்சின் வர்த்தக முதலீட்டு கொள்கை திணைக்களமானது இதற்கான HS நியமத்தினை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. HS வெளியிடப்பட்டதுடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலானது விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.
 
இதனை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியன நடைமுறைப்படுத்தவுள்ளன.
மேலும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள பிளக்குகள் மற்றும் சொக்கெற் அவுட்லெட்களை விற்பனை செய்வதற்கான கருணைக் காலமானது 2018 ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தத் திகதிக்கும் பின்னர் மேற்குறிப்பிடப்பட்ட தேசிய நியமத்திற்கு  விரோதமான பிளக்குகள் மற்றும் சொக்கெற் அவுட்லெட்களை இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய முடியாது எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது வலியுறுத்தியுள்ளது.
 
தற்போது வீடுகளில் பயன்பாட்டில் உள்ள பிளக்குகள் மற்றும் 
சொக்கெற் அவுட்லெட்களை அவற்றின் காலாவதி திகதி அல்லது ஆயுட்காலம் முடியும் வரை பயன்படுத்தலாம். ஆனால் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் போது இத்தேசிய நியமத்தை கடைப்பிடிக்க வேண்டுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றது.
 
இவற்றுக்கு மேலதிகமாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்தாக்க மரணங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமது இல்லங்களை 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆவர்த்தன முறை மின் பரிசோதனையினை மேற்கொள்ளும் முறையினை நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், மின் பரிசோதகர்களுக்கு அனுமதிப்பத்திரத்தினை வழங்கும் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தவுள்ளது. வீடுகளில் கட்டாயம் ட்ரிப் சுவிட்ச்களை பொருத்துமாறு வலியுறுத்தியுள்ளதுடன், இதனை இலவசமாக வழங்குவதற்கான நடைமுறைகளையும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளது.
 
மேற்குறிப்பிடப்பட்ட தேசிய நியமத்திற்கு அமைய 2038 ஆம் ஆண்டளவில் முழு இலங்கையும் இந்த ஒற்றை நியமத்தின் பயன்பாட்டில் இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது எதிர்பார்க்கின்றது.
TOTAL VIEWS : 358
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
fl8qd
  PLEASE ENTER CAPTA VALUE.