வரி மறுசீரமைப்பு
2017-09-11 11:19:53 | General

வரி அறவீட்டு முறைமையை இலகுபடுத்தி வருவாயை அதிகரிப்பதை இலக்காகக் கொண்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. மூன்று வருடக் கடனாக 1.5 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்த வரி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இணங்கியிருந்த நிலையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் பாரிய மறுசீரமைப்பு இடம்பெற்றிருப்பதை காண முடியும்.

2020 இல் நேரடி வரிக்கும் மறைமுக வரிக்குமான இடைவெளி குறைந்து விடுமெனவும் இதனால் பொருளாதார ரீதியில் நாடு முன்னோக்கிச் செல்லுமெனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருக்கிறார். தற்போது மறைமுக வரி 82% மாக காணப்படும் நிலையில் அதனை 60% ஆக குறைத்து தற்போது 18 வீதமாக அறவிடப்படும் நேரடி வரியை 40% மாக அதிகரிக்கப் போவதாகவும் அமைச்சர் கூறியிருக்கின்றார். அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் சர்வதேச வரி இலக்கத்தை வழங்குவதுடன் வரிக் கொடுப்பனவுகளை இலகுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


இந்த மறுசீரமைப்புகளின் ஊடாக வருடாந்தம் அரச வருவாயை 45 பில்லியன்  ரூபாவாக உயர்த்துவது இலக்காக உள்ளதை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். நடைமுறையிலிருந்து வந்த வருமான வரி முறைமை சிக்கலானதாக இருந்ததாகவும் அதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்ததாகவும் உலகில் வரி வருமானம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் சில நிறுவனங்களில் தனியாட்களும் வரி செலுத்துவது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள போதும் அதனை செலுத்துவதில்லையெனவும் கூறியிருக்கிறார்.

நிதி ஸ்திரத்தன்மை, சமத்துவமான வரிமுறைமை, சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதாரங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த மறுசீரமைப்புகள் உதவியாக அமையுமென அமைச்சரும் ஆளும் தரப்பினரும் கூறியுள்ள அதேவேளை ஜே.வி.பி. மற்றும் கூட்டு எதிரணி போன்ற  எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மறுசீரமைப்பு என்ற போர்வையில் சகல பிரஜைகளையும் வரி செலுத்துபவர்களாக்குவதும் குறிப்பாக வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மேலும் சுமையை ஏற்றுவதுமாக அமைந்திருப்பதாக எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 


தாங்கள் பிரேரித்திருக்கும் 49 திருத்தங்களைச் சேர்த்துக் கொள்ளுமாறும் அதேவேளை காண்பித்துள்ள 16 சட்டவிதிக் கூறுகளை நீக்கிவிடுமாறும் ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தது. அத்துடன் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தின் 97ஆவது சட்டவிதிக் கூற்றின் பிரகாரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சார்பில் அரசாங்கம் எந்தவொரு தனிப்பட்டவர் அல்லது அமைப்பொன்றை வரி சேகரிப்பதற்கு நியமிக்கக்கூடியதாக இருக்குமெனவும் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தவே இச்சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை குடும்பத்திற்குள் சொத்துகளை கைமாற்றிக் கொள்ளும் போது அல்லது சீதனமாக அல்லது முதுசமாக பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆதனங்களை வழங்கும்போது அரசாங்கம் வரியை அறவிடுவதற்கான சட்டவிதிக் கூறும் இப்புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தில் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 


நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 43% க்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு 320 ரூபாவுக்கு மேலான தொகையை வருமானமாக பெற்றுக் கொள்வதில்லை. இந்நிலையில் சீதனமாக கொடுக்கப்படுபவற்றுக்கும் வரி விதிப்பது நியாயமற்றதொன்றாகும் என்பதையும் ஜே.வி.பி.யினர் முன்னிறுத்தியுள்ளனர்.

ஆயினும் மாதாந்த சம்பளம் 1 இலட்சம் ரூபாவுக்கு குறைவாக பெறுவோரிடம் வருமான வரி அறவிடப்படமாட்டாதென்பதும் 125,000 ரூபா வரையில் மாதாந்தம் வட்டி வீத வருமானத்தை பெற்றுக் கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகளிடம் வரி அறவிடப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டிருப்பதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான வரியை 28% இலிருந்து 16% மாக குறைத்திருப்பதும் யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டு கடந்த 8 வருடங்களாக ஏனைய மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்களிக்க முன்வந்திருப்பதும் ஆக்கபூர்வமான தீர்மானமாக தோன்றுகிறது.  

TOTAL VIEWS : 960
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6ymde
  PLEASE ENTER CAPTA VALUE.