சிவில் சமூக அமைப்புகளும் முன்னாலுள்ள பொறுப்புகளும்
2018-01-08 12:06:14 | General

பொதுமக்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வுடன் தொடர்புபட்ட விவகாரங்கள் குறித்து பொதுவான அபிப்பிராயத்தை உருவாக்குவதில் சிவில் சமூகம் அண்மைக்காலத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது. 2015 ஜனவரியில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும் சிவில் சமூகத்தின் பங்களிப்பு கனதியானதாக அமைந்திருந்ததாக கூறப்பட்டது.

ஜனநாயக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவில் சமூகம் முக்கியமானதொன்றாக காணப்படுகிறது. அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்கும் இடையில் முக்கியமான பிணைப்பையும் சிவில் சமூகம் ஏற்படுத்துகின்றது.

அதேவேளை, ஆளும் தரப்பிலுள்ள அதிகாரம் வாய்ந்த அரசியல்வாதிகள், நிர்வாகத்துறை அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பதும் சிவில் சமூகமொன்றின் முக்கியமான பணியாகும். அரசின் சட்டவாக்க, நிர்வாக, நீதித்துறை அதிகாரத்திலிருந்தும் வேறுபட்ட அமைப்புகளும் இந்த சிவில்  சமூகத்தில் உள்ளடங்குகின்றன.

இதர பல நாடுகளில் போன்றே இலங்கையிலும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் இயங்குகின்றன. பொது மக்களின் நலன் கருதிய விடயங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கையெடுப்பதற்கும் முக்கியமான பங்களிப்பை சிவில் சமூகம் வழங்கி வருகிறது. 

ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் தார்மீக நெறிப் பிறழ்வுடன் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து அரசாங்கத்துக்கு எடுத்துரைத்து சீர்ப்படுத்துவதற்கும் சிவில் சமூகம் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியதாகும். எவ்வாறாயினும் பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் நாட்டு மக்கள் என்ற ரீதியில் பொதுவான அடையாளத்தைக் கொண்ட சிவில் சமூகமாக செயற்படுவதற்கு அப்பால் இன, மதக் குழுக்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளையும் காணமுடியும். அத்தகைய சிவில் அமைப்புகளின் வகிபாகங்கள் தொடர்பாக கவலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

அதேசமயம் உலகமயமாக்கல் மற்றும் இதர செல்வாக்கைச் செலுத்தக் கூடிய காரணிகளால் சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் நாடொன்றுக்கு அப்பாலும் விரிவுபடுத்தப்படுவதுண்டு. உண்மையில் சிவில் சமூகமொன்று ஆக்கபூர்வமான வகிபாகத்தை கொண்டிருப்பது மிகவும் அவசியம். பிரஜைகள் குழுக்கள் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன. 

சமூக, கலாசார அமைப்புகள், தொழில்சார் நிபுணர்கள் குழுக்கள், தொழில் சங்கங்கள், வர்த்தக, தொழில் துறைச் சம்மேளனங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், சிறிய உள்ளூர் கழகங்கள், அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகளென பல தரப்பட்டவை நாடளாவிய ரீதியில் இருக்கின்றன. அதேவேளை சிவில் சமூக அமைப்புகளை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகளும் அரசியலமைப்பு ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

உண்மையில் சிவில் சமூக அமைப்புகளைப் பொறுத்தவரை கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் பரஸ்பரம் உதவி வழங்குவதை ஊக்குவிப்பதற்கும் பொதுநலன் சார்ந்தவையும் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் நிலுவையாக இருந்து வருபவையுமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு இணக்க பூர்வமான தீர்வைக் கண்டுகொள்வதற்கு உதவுதல் போன்றவற்றுக்கும் சிவில் சமூக அமைப்புகள் உதவுகின்றன.

ஆனால், அரசாங்கங்கள் மற்றும் வெளிநாடுகள் வழங்கும் நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அரச முகவரமைப்புகளூடாக தங்களைப் பதிவு செய்து விட்டு பொது நலன் சார்ந்த விடயங்களில் சிறிதளவும் கரிசனை காட்டாத சிவில் சமூக அமைப்புகளும் இல்லாமலில்லை. 

முக்கியமான விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த சிவில் சமூக அமைப்புகள் முன்னின்று செயற்படுவதே தேவைப்பாடாகும். கொள்கை மற்றும் திட்டமிடலில் பொது மக்களின் அபிப்பிராயத்தை திரட்டிக் கொள்ளவும் சமூக,பொருளாதார , கலாசார நடவடிக்கைகள், வெளிப்படைத் தன்மை, பதிலளிக்கும் கடப்பாடு போன்றவற்றை மேம்படுத்தவும் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம் குறிப்பிடத்தக்கதொன்று.

அத்துடன், பெண்கள், சிறுபான்மை இன, மதக் குழுக்கள் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள ஏனைய குழுக்களின் மனித உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் சிவில் சமூக அமைப்புகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. அதேசமயம் சமூகங்களை தளமாக கொண்ட குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புகள், தொழில்சார் சங்கங்கள், பிராந்திய அமைப்புகள் போன்ற 
சிவில் சமூக அமைப்புகள் பாரியளவில் சமூகத்தின் நலன்களுக்கு பாதிப்பான விடயங்களை அடையாளம் கண்டுகொள்ளும் தருணங்களில் "சுறுசுறுப்பாக' செயற்பட ஆரம்பிக்கின்றன.

குறித்த விவகாரம் தொடர்பாக பொது மக்களின் அபிப்பிராயத்தை முறையாக ஒன்று திரட்டுவதே அவற்றின் பிரதான நடவடிக்கையாகவும் காணப்படுகின்றன. ஆனால், இலங்கையை பொறுத்தவரை சிவில் சமூக அமைப்புகள் சில பலவீனத்தையும் கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும். இந்த சிவில் சமூக அமைப்புகளில் சில அதிகளவுக்கு அரசியல் மயமாக்கப்பட்டிருப்பதையும் இன, மத ரீதியான பிளவுண்டிருப்பதையும் கூட காணமுடியும்.

அத்துடன், சில அமைப்புகள் வெளிப்படைத் தன்மை, பதிலளிக்கும் கடப்பாடு என்பனவற்றை தாழ்ந்த மட்டத்தில் கொண்டிருக்கின்றன. சிவில் சமூக அமைப்புகள் இன, மத பேதமின்றி பொது நலனை முன்னிறுத்தி கரும மாற்றும் போதே நாடொன்றின் சகல மக்களும் அவற்றின் மூலம் பயன்பெற முடியும்.

 

TOTAL VIEWS : 2071
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3xmah
  PLEASE ENTER CAPTA VALUE.