இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வலியுறுத்தல்
2017-10-10 11:25:22 | General

நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக வட, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் விசனமும் கவலையும் வெளிப்படுத்தப்படுவதுடன், எதிர்ப்பும் போராட்டமும் தீவிரமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதும் உறுதிமொழிகளில் ஒன்றாகும்.

அந்தச் சட்டமூலத்தை சட்டமாக்குவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. வடக்கில் காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோரும் உறவினர்களும் 7 மாதங்களுக்கும் மேலாக அகிம்சாவழியில் போராடி வருகின்றனர். அவர்களின் உள்ளக் குமுறல்களும் அவலங்களும் தினமும் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. 


தமது தொலைந்துபோன உறவுகளின் கதி என்ன என்பது பற்றித்தேடிக் கண்டறிந்து தருவார்களென்றும் ஆறுதலளிப்பார்களெனவும் தங்களின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் தலைவர்களிடம் தாங்கள் விடுத்திருந்த வேண்டுகோள்கள், மன்றாட்டங்களுக்கு எந்தவொரு நியாயபூர்வமான பதிலும் வழங்கப்படவில்லையெனவும் தாங்கள் மரணமடைந்து விடுவார்களெனவும் காணாமற்போனோரின் தாய்மார்கள் கதறி அழுவது "கல்லையும் கரைக்கக்கூடியதாக' இருக்கிறது.

இந்நிலையில் பலவந்தமாக காணாமற்போதல் தொடர்பான சட்டமூலத்தை சட்டமாக்குமாறு ஜனாதிபதி சிறிசேனவிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம கோரிக்கை விடுத்திருக்கிறார். காணாமல்போதல் தொடர்பாக நீண்டவரலாற்றை இலங்கை கொண்டிருக்கிறது. 
அத்துடன் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமைக் கலாசாரம் பரந்தளவில் காணப்படுவதாகவும் கவலையும் விசனமும் வெளிப்படுத்தப்படுகின்றது.

வடக்கு, கிழக்கிலும் தெற்கிலும் (இரு கிளர்ச்சிகளின் போது) பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு உத்தேச சட்டம் உதவுமென்ற கருத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அத்துடன் பல குடும்பங்கள் குடும்பத்தலைவர்களை இழந்திருப்பதுடன், பெண்களே குடும்பங்களுக்கு தலைமைதாங்கி உழைத்துக் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அத்துடன் அவர்களின் பிள்ளைகள் கல்வி உட்பட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலையில் காணப்படுகின்றனர். அந்தக் குடும்பங்களின் உளரீதியான தாக்கம், பொருளாதார ரீதியான பாதிப்பு என்பன நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வருகின்றன. 


இந்நிலையில் பலவந்தமாக காணாமல் போதல் என்பது வெறுமனே சட்டம் மற்றும் மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட பிரச்சினை மட்டுமன்றி சமூக விவகாரமாகவும் உள்ளதென மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியிருக்கிறது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து 8 வருடங்கள் கடந்த நிலையிலும் முன்னைய அரசாங்கம் ஆட்சியிலிருந்து வெளியேறி புதிய அரசு அதிகாரத்திற்கு வந்து 2 ஆண்டுகள் தாண்டிவிட்ட நிலையிலும் காணாமற்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்று அறியமுடியாமலும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்று பதகளிப்புடனும்  இருப்போருக்கு இந்தக் குரூரமான குற்றத்திலிருந்தும் பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனரென்ற ஆறுதலளிக்கும் செய்தியை இச்சட்டம் அளிக்குமென மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.


ஆனால் இந்தச் சட்டமூலம் கடந்த கால சம்பவங்கள் தொடர்பாக ஆராயமாட்டாதெனவும் எதிர்கால சம்பவங்களுக்கு மட்டுமே பிரயோகிக்கக் கூடியதாக இருக்குமெனவும் கடந்த செப்டெம்பரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை காணாமலாக்கப்பட்டோரை நீண்டகாலமாக தேடியலையும் ஆயிரக்கணக்கானோருக்கு பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அதேவேளை பலவந்தமாக காணாமற்போதலிலிருந்தும் சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தை அங்கீகரிக்கும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் கடந்த செப்டெம்பர் 21 இல் இடம்பெறவிருந்தும் அது இடம்பெறவில்லை. இது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்டிருந்ததாக அச்சமயம் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இந்தச் சட்ட மூலத்தை சட்டமாக்குவது தெற்காசிய பிராந்தியத்திற்கு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் முன்னுதாரணமாக அமையுமென ஜனாதிபதிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியிருப்பது தார்மீகச் சிந்தனைகொண்டது மாத்திரமன்றி பாரதூரமான மனித உரிமை மீறல்களால் கடும் துன்பமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கானோரின் துன்பங்கள் மற்றும் மனரணங்களை ஆறுதல்படுத்தக்கூடிய மனிதாபிமான நடவடிக்கையாகவும் அமையும்.

TOTAL VIEWS : 1842
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ywb2o
  PLEASE ENTER CAPTA VALUE.