தன்னம்பிக்கையே எப்போதும் தேவை
2018-01-03 11:14:59 | General

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கை அவசியமென்பதை மூத்தவர்கள் அடிக்கடி நினைவூட்டிவருவதுண்டு. வெவ்வேறுபட்ட தொழில்களில் ஈடுபடுவோர் வாழ்வில் வெற்றியை அடைவதற்கான பாதையாக "தன் நம்பிக்கை' எப்போதுமே கருதப்படுகிறது.

கடந்த வாரம் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறில் அகில இலங்கையில் முதலிடங்களைப் பெற்ற சகல பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் இலக்கை எட்டுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது அவர்களிடமிருந்த "தன்னம்பிக்கை' யேயென்பது ஊடகங்களுக்கு அவர்கள் தெரிவித்திருந்த கருத்துகள் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையில் "சுய நம்பிக்கை' இல்லாமல் வாழ்க்கையில் வெற்றியை எம்மால் எதிர்பார்க்க முடியாது. வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறுபட்ட கருத்துகளை கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவர் எப்போதுமே தன் நம்பிக்கையுடன் கருமமாற்றும்போதே இலக்கை எட்டமுடியும். முன்னேற்றம், அபிவிருத்திக்கான காலமாக தற்காலம் கருதப்படுகிறது.

ஆயினும் எம்மில் அநேகமானோர் அநேகமான விடயங்கள் தொடர்பாக அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவதுண்டு. ஒப்பீட்டளவில் சிறிய பிரச்சினையொன்று தொடர்பாகக் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கும் போது நாங்கள் குழப்பமடைவதுண்டு. ஆனால் பிறர் கூறுவதை செவிமடுத்து அதே சமயம் சுயமாக அதனைப் பரிசீலித்து தன்னம்பிக்கையுடன் இறுதித் தீர்மானத்தை எடுக்கும்போது வெற்றிப்பாதையில் செல்ல முடியுமென்பது அறிஞர்களின் பட்டறிவு அனுபவம்.
சந்தேகம் ஏற்படுவது இயல்பு. அநேகமான விடயங்களில் எவரும் சந்தேகப்படாமலிருப்பதென்பது யதார்த்தத்துக்கு மாறான விடயம்.

ஆனால் "சுயநம்பிக்கை' என்பது இந்த சந்தேகத்தை தோற்கடிக்கக்கூடியதொன்றாகும். எமது மனம் எப்போதுமே உறுதியுடன் விளங்குவதற்கும் வாழ்வின் எந்தக்கட்டத்திலும் தோல்வியை தழுவிடக்கூடாதென்ற வைராக்கியத்துடன் இருப்பதற்கும் உறுதியான நம்பிக்கை தேவைப்படுகிறது. அதனையே தன்னம்பிக்கையென கூறமுடியும். கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள், பல்துறை விற்பன்னர்களிடம் மட்டுமே "தன்னம்பிக்கை' இருக்கின்றதென்றும் அதனாலேயே அவர்கள் சாதனை படைக்கிறார்களெனவும் பொதுவாக கருதப்படுவதுண்டு. இது தவறானதாகும்.

சாதாரணமான தொழிலாளர்கள் கூட தமது கோணத்தில் வெற்றியை எட்டுவதற்கு தேவையான சுயநம்பிக்கையை கொண்டிருக்கின்றனர்.
சுய நம்பிக்கை எப்போதுமே வாழ்வில் வெற்றிநடை போடுவதற்கு எம்மை வழிநடத்திச் செல்லும். தற்போதைய நவீன காலத்தில் எம்மத்தியில் அதாவது எமது அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கலான நிலைமைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எம்மிடம் "தன்னம்பிக்கை' போதிய அளவுக்கு இருக்குமானால் எமது வாழ்வில் மிக இலகுவாக இலக்கை வென்றெடுக்க முடியும்.

சாதாரண மக்களுக்கு மட்டுமன்றி எம்மத்தியிலுள்ள உன்னதமான மனிதர்கள் கூட, அவர்கள் கொண்டிருக்கும் தன்னம்பிக்கையின் மூலமே அவர்கள் சிக்கல்களை எதிர்நோக்கும் போது, அவற்றை முறியடித்து வெற்றிகண்டுள்ளனர். அவர்களை எப்போதும் வெற்றிப்பாதையில் கொண்டுசெல்வது இந்தத் தன்னம்பிக்கையே. மகாத்மாகாந்தி, சுவாமி விவேகானந்தர், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போன்றோர் அவர்களின் வாழ்வில் நெருக்கடியான, சிக்கலான தருணங்களை கடந்துவந்திருந்தனர் என்பதை அவர்களின் வரலாறுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் கொண்டிருந்த தன்னம்பிக்கையே அவர்களின் வாழ்வின் பிற்காலத்தில் வெற்றி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததென கூறமுடியும்.

தொழில் துறைகளிலும் தொழில்சார் நிபுணர்கள் சிலருக்கு பதவியுர்வோ அல்லது வெற்றிகளோ கிடைப்பதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களின் பொறுமையும் தன்னம்பிக்கையும் சகல தடைகளையும் அகற்றி அவர்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பங்களையும் "அனுபவங்கள்' மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும். எப்போதுமே எமது இலக்கில் நாம் பற்றுதியுடன் இருந்தால் எம்மிடமிருக்கும் தன்னம்பிக்கையை அகற்றிவிட முடியாது.

சுயநம்பிக்கையுடன் உள்ள ஒருவர் எப்போதும் சாதகமான பார்வையைக் கொண்ட அணுகு முறையையே வாழ்வில் கைக்கொள்வார். வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களினால் தளர்ந்து விடமாட்டார். தன்னம்பிக்கையுடையவர்கள் எப்போதுமே சமூகத்தில் மதிக்கப்படுபவர்களாக விளங்குவதை கண்டு கொள்ள முடியும். அத்துடன் இவர்கள் சகல குணாம்சங்களைக் கொண்டவர்களுடனும் எப்போதும் நட்புறவுடன் பழகக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

அதேசமயம் தன்னம்பிக்கை உடல் ஆரோக்கியத்தையும் தருமென உளநல அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே தன்னம்பிக்கையென்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாததொன்றாகும். தன்னம்பிக்கையின்றேல் வாழ்க்கை எப்போதுமே தாழ்ந்த மட்டத்திலேயே இருக்கும். வாழ்வில் எமது அபிலாஷைகள் நிறைவேற இலக்குகளை சென்றடைய தன்னம்பிக்கையை எப்போதும் நாம் கொண்டிருப்போம்.

 

TOTAL VIEWS : 1384
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nowa8
  PLEASE ENTER CAPTA VALUE.