உண்மை, நீதிக்கான காத்திருப்பு
2017-08-11 10:02:03 | General

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகள் முழுமையாக முடிவடைந்தும் "நல்லாட்சி' உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பதவிக் காலத்தில்  2 ஆண்டுகள் நிறைவடைந்துமிருக்கின்ற போதிலும் சமூக நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும்  காத்திருக்கும் நிலைமையே தொடர்கிறது.

நீண்டகாலமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள், குறிப்பாக வட, கிழக்கு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நிலைமாற்று நீதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி நீதி வழங்குமென்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் அதிகளவுக்கு கொண்டிருந்த போதும் இப்போது அந்த நம்பிக்கை குறைவடைந்து செல்வதாக தென்படுகிறது.

அத்துடன், அரசாங்கத்திற்கும் அதிகளவுக்கு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியும் குறையவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஓரம்கட்டப்பட்டவர்களாக இருக்கின்றனரென்ற உணர்வையே அதிகளவுக்கு கொண்டிருக்கின்றனர். 


2015 ஜனவரியில் ஏற்பட்ட அதிகாரமாற்றத்தையடுத்து போரின் இறுதிக் கட்ட உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென தற்போதைய அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்திருந்ததுடன், அங்கு நிறைவேற்றப்பட்ட, இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

பின்னர் நடப்பாண்டின் மார்ச்சிலும் ஜெனீவாப் பேரவை அமர்வின் போதும்  2015 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நிலை மாற்று நீதிப் பொறிமுறைகளில் முக்கியமானவற்றையாவது அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் தொடர்ந்தும் காத்திருக்கும் நிலைமையே காணப்படுகிறது. 


உண்மை ஆணைக்குழு, காணாமல்போதல், இழப்பீடுகள் போன்ற விவகாரங்களைக் கையாள்வதற்கான  அலுவலகங்கள், யுத்த கால துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை கையாள்வதற்கான நீதித்துறை பொறிமுறையொன்றை ஏற்படுத்துதல் என்பன நிலைமாற்று நீதி நடவடிக்கைகளில் பிரதானமானவையென அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

ஆனால்,  2016 ஆகஸ்டில் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதும் அதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம் இருமாதங்களுக்கு முன்னர் தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அந்த அலுவலகம் எப்போது முறையாக செயற்பட ஆரம்பிக்கும் என்பது பற்றி தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.


அதேவேளை, நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக கலந்தாலோசனை செயலணிப் பிரிவொன்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவால் 2016 ஜனவரியில் நியமிக்கப்பட்டது. நாட்டின் நிலைமாற்று நீதிப் பொறிமுறைகளை வடிவமைப்பது தொடர்பாக பரந்தளவில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அந்த செயலணிப் பிரிவு பல்வேறுபட்ட பரிந்துரைகளுடன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. ஆயினும் அந்த அறிக்கைக்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. 


உண்மை மற்றும் நீதி தொடர்பாக திருப்திகரமான தீர்வை வழங்க முடியாத தன்மையே தொடர்ந்தும் காணப்படுகிறது. காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. காணாமல் போதல் என்பது மனிதத்துவத்துக்கு எதிரான குற்றமாக இருக்கின்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணப்பட்டு அவர்களின் மன ரணங்களை ஆற்றுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உண்மையை கண்டறியவும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்குமாக  ஏங்கிக் கொண்டிருப்பதை  காணமுடிகிறது. ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் முறைப்பாடுகளை தெரிவித்திருக்கின்ற போதிலும் உண்மை மற்றும் கௌரவத்தை வழங்கும் கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்புடைய சூழல் இன்னமும் தோற்றுவிக்கப்படவில்லையென்றே தோன்றுகிறது.  

பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதாகவே நிலைமாற்று நீதிப் பொறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், நீண்ட காலமாக தொடரும் இன நெருக்கடியாலும் யுத்தத்தாலும் இடம்பெயர்வாலும் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உண்மையும் நீதியும் தொடர்ந்தும் மறுக்கப்படும் போக்கே தொடர்கிறது.

TOTAL VIEWS : 1195
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6ykhr
  PLEASE ENTER CAPTA VALUE.