பிணைமுறி விவகாரம் அடுத்த கட்டம் என்ன?
2018-01-08 12:04:04 | General

மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் குறித்த விசாரணை அறிக்கையும், அது தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட அறிவிப்பும்தான் இந்த வாரத்தின் பேசு பொருளாகியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியான அரசியல் நகர்வுகளைத்தான் அடுத்த வாரத்திலும் காணக்கூடியதாக இருக்கும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை, இலங்கை அரசியலில் ஒரு சூறாவளியைக் கிளப்பியுள்ளது. இதனை தமது அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து அரசியல் தரப்பினரும் முற்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இதன் அடுத்த கட்டம் என்ன? குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளவர்கள் தண்டனைக்குள்ளாவார்களா? கூட்டாட்சியாகவுள்ள நல்லாட்சியை இது பாதிக்குமா? என்ற கேள்விகள்தான் இப்போது அரசியல் களத்தில் எழுப்பப்படுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு விசாரணை அறிக்கைகளை இப்போது கைகளில் வைத்திருக்கின்றார். ஒன்று  இந்த பிணைமுறி விசாரணை அறிக்கை. மற்றது  முன்னைய ஆட்சிக் காலத்தில் அதாவது மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கை.

இந்த இரண்டாவது அறிக்கையின் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படாவிட்டாலும், அதன் உள்ளடக்கமும் முன்னைய ஆட்சியாளர்களுக்குப் பாதகமாக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஊழல்களுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேனவின் செல்வாக்கை இவை இரண்டும் அதிகரித்திருக்கின்றது.

"எனது வாள் வீச்சுக்கு யார் இரையாகப்போகின்றார் என எனக்குத் தெரியாது'  எனவும், "ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தன் வாள்வீச்சுக்குத் தப்ப முடியாது' எனவும் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கூறியிருந்தார். இந்த இரு அறிக்கைகளும் வெளிவரவிருந்த நிலையில்தான் அவரது இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. 

ராஜபக்ஷ குடும்ப ஆட்சி தொடர்வதையும், அதில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகக் கூறியுமே 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஊழலற்ற ஆட்சி ஒன்றைத் தரப்போவதாகச் சொல்லியே புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால், புதிய ஆட்சி அமைக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளேயே மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றிருப்பதை தற்போதைய விசாரணை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி பிரிவை தனியாகப் பிரித்தெடுத்ததன் மூலமாகவே ஆட்சி மாற்றத்தை ஐ.தே.க. ஏற்படுத்தியது. தனியாக போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்ற நிலையில்தான் சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரியை ஐ.தே.க. பிரித்தெடுக்கவேண்டியிருந்தது.

அதேபோல, தமது கட்சியில் ராஜபக்ஷவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஐ.தே.க.வின் துணை சந்திரிகா  மைத்திரிக்கு தேவையாக இருந்தது. இரு தரப்பினரது நலன்களின் அடிப்படையில்தான் நல்லாட்சி அமைக்கப்பட்டது. 

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் இந்த நல்லாட்சிக்குள் ஒரு பூகம்பத்தைக் கிளப்புவதாக இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைமைகளை நிதானமாகக் கையாள்கின்றார். நல்லாட்சியைப் பாதுகாக்கும் அதேவேளையில், ஊழல் மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.

அவரது அறிவிப்புக்கள் அவர் மீதான நம்பகத் தன்மையை அதிகரித்திருக்கின்றது. பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பவர்கள் ஐ.தே.க.வைச் சேர்ந்தவர்கள்தான். அரசியலில் இவ்விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருப்பதற்கும் இதுதான் காரணம்.

அதேவேளையில், இந்த விசாரணைகளுக்கு உதவுவதாகச் சொல்லியிருப்பதன் மூலம், ஊழல் மோசடிகளுக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியிருக்கின்றார். இதன் மூலம், நல்லாட்சியில் பிளவு ஏற்படலாம் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது. 

உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் உருவாகியிருக்கும் இந்தப் பிரச்சினை  தேர்தல் கள நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். தேசிய அரசியலில் மும்முனைப் போட்டியொன்று இப்போது உருவாகியிருக்கின்றது.

மைத்திரி, ரணில், மகிந்த என்ற மூன்று தரப்பினருக்கு இடையிலான போட்டியின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றார்கள். இந்தத் தேர்தலின் முடிவுகள்தான் அரசியலின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையும் என்பதையும் கட்டியம் கூறுவதாக அமையும். அதேவேளையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதையும், மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையும் கூறுவதாக இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். உள்ளூராட்சித் தேர்தல் இம்முறை முக்கியம் பெறுவதற்கு இவைதான் காரணம். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்த அறிக்கை இச்சந்தர்ப்பத்தில் வெளிவந்திருப்பதும் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது. 

விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியைத்தான் ஜனாதிபதி வெளிப்படுத்தி தனது கருத்துக்களையும் கூறியிருக்கின்றார். இந்த அறிக்கை இப்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படும். வழக்குத் தாக்கல் செய்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம்தான் முடிவெடுக்கும்.

அதேவேளையில், முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளிலும் தொய்வு நிலைதான் காணப்படுகின்றது. இதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நாட்டு மக்களுடைய சொத்துக்களை சூறையாடலாம் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்திருக்கின்றது.

இதுவும் வழமையான ஆணைக்குழு அறிக்கைபோல போய்விடாமல் ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அதன்மூலமாகவே அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான பாடம் ஒன்றைக் கற்றுக்கொடுக்க முடியும். 

TOTAL VIEWS : 1510
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
acrn3
  PLEASE ENTER CAPTA VALUE.