மகாநாயக்க தேரர்களுடனான வடக்கு முதல்வரின் சந்திப்பு
2017-09-12 11:34:46 | General

கண்டியில் அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தமிழ் மக்கள் குறிப்பாக வட, கிழக்கை வரலாற்று பூர்வ வாழ்விடமாகக் கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், துன்பங்கள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துரைத்திருக்கின்றமை ஆக்கபூர்வமான முன்னகர்வாகத் தோன்றுகிறது.

வட மாகாண சபை நிர்வாகத்தை தன்வசம் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் விளங்குகின்ற போதிலும் தென்னிலங்கையில் குறிப்பாக கடும்போக்கு பௌத்த சிங்கள மேலாதிக்கவாத சிந்தனையுடையவர்களின் பார்வையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவராக தென்படுவதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

இந்நிலையிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கம் விரைவில் நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் தருணத்திலும் மகா நாயக்கர்களை சந்தித்து களநிலைவரத்தை எடுத்துக் கூறியதுடன் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் தொடர்பாக விபரித்துமிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை மல்வத்த மகாநாயக்க தேரர் அதிவண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையும் ஞாயிற்றுக்கிழமை வரகாகொட ஞானரத்ன தேரர் தலைமையிலான பிக்குமார் குழுவினரையும் வடக்கு முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் குழு சந்தித்திருக்கின்றமையும் இடம்பெற்றிருக்கும் கலந்துரையாடல்களும் இரு தரப்பினர் மத்தியில் பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு அதிகளவுக்கு உதவக்கூடும். 


அதேவேளை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வாக சமஷ்டி முறைமையிலான அரசியல் இணக்கப்பாட்டையே நாடி நிற்கின்றார்கள் என்பதையும் முதலமைச்சர் உறுதியான முறையில் மகாநாயக்கர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருப்பதுடன், சமஷ்டி என்பது நாட்டைப் பிளவுபடுத்துவதை  இலக்காகக் கொண்டதல்ல எனவும் ஒரே நாடாக வைத்திருப்பதற்கு உதவக்கூடிய முறைமையென்றும் எடுத்துரைத்திருப்பதை அறிய முடிகிறது. பிரிட்டிஷாரிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் சமஷ்டி முறைமையிலான தீர்வையே வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், சமஷ்டி முறைமையானது நாட்டைப் பிளவுபடுத்தி விடுமெனவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் கடந்த காலத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்தவையும் தற்போது பிரதான பங்காளிகளாக கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருப்பவையுமான ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் கூறி வருகின்றன. அதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவுக்கு கடந்த வாரம் வழங்கியிருந்தது.

அந்த அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டுமெனவும் தற்போது நடைமுறையிலிருக்கும் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம்  அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபையே அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அலகாக இருக்க வேண்டுமெனவும்  ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைக்கக்கூடாதெனவும் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.


அதேவேளை, தமிழ்த் தரப்பின் சமஷ்டிக் கோரிக்கை பிரிவினைக்கு அத்திபாரமிடுவதெனவும் உத்தேச அரசியலமைப்பு புலம்பெயர்ந்த புலிகள் 
சார்பு குழுவினரின் தேவையை நிறைவேற்றவே என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பொது எதிரணியினர் 
சாடி வரும் நிலையில் கடந்த ஆகஸ்டில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்று தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சமஷ்டி முறைமையூடாக அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதனால் நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாதென தீர்ப்பளித்திருந்தது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர் உபாலி அபேரட்ண, நீதியரசர் அனில் குணரட்ன ஆகிய மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் ஆகஸ்ட் 4 இல் வழங்கிய தீர்ப்பில் சமஷ்டி முறைமையிலான ஆட்சி தொடர்பாக தெளிவான குறிப்பை வழங்கியிருந்தது.

1949 இலிருந்து பெடரல் பார்டியென ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி (தற்போது தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைப் பங்காளி) சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி வந்த நிலையில் நாட்டைப் பிரிப்பதை அக்கட்சி ஆதரிப்பதாக அன்று முதல் இன்றுவரை தென்னிலங்கையில் கடும் குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 4 இல் உயர்நீதிமன்றம் வெளியிட்டிருந்த தீர்ப்பில் அரசியலமைப்பின் சரத்து 157ஏ யின் பிரகாரம் இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனியான நாடொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கவோ மேம்படுத்தவோ நிதியளிக்கவோ ஊக்குவிக்கவோ இல்லையென தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் வடக்கு முதலமைச்சர் பௌத்த சிங்கள மக்களால் அதிகளவுக்கு மதிப்பளிக்கப்படும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்திருப்பது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்பாக இருந்து வரும் பாரிய இடைவெளியை குறைப்பதற்கு உதவக்கூடும். 

TOTAL VIEWS : 1542
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
pv7qo
  PLEASE ENTER CAPTA VALUE.