மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவர்
2017-09-27 09:20:31 | General

மியன்மாரைச் சேர்ந்தவர்கள் உட்பட அகதிகளாக இலங்கைக்குள் வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் யாரேனும் சம்பந்தப்பட்ட நாட்டில் குற்றங்களை இழைத்தவர்களாக இருப்பின், அந்நாடு கோரும் பட்சத்தில் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தலதா அத்துகோரள இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 


சீனா, உக்ரைன், வியட்நாம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் மீள ஒப்படைத்தல் தொடர்பில் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை அங்கீகரிக்கும் மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழான இந்தக் கட்டளைகள் நேற்று 
சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில், இவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் மேற்படி 4 நாடுகளுடனும் அதேபோல், அவற்றுடன் கூட்டிணைந்த ஏனைய நாடுகளுடனும் மீள ஒப்படைத்தல் தொடர்பில் செயற்படுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


இதேநேரம், மியன்மாரில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்த முகாம்களை விட்டு வெளியில் வந்து கல்கிஸ்சை பகுதியில் வீடுகளில் வசித்து வந்திருப்பதுடன், அவர்களது பிள்ளைகளை பாடசாலைகளிலும் கூட சேர்த்திருப்பதாகவும் அவர்கள் தற்போது  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றனவே என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரும் இந்த விவாத்தின் போது நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கேள்வி எழுப்பினர். 


எனினும், சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பிலான நம்பகத்தன்மையில் சந்தேகம் இருப்பதால் இது தொடர்பில் இந்தச் சந்தர்ப்பத்தில் பதிலளிக்க முடியாது என்றும், இந்த விடயம் தொடர்பில் முறையாக கேள்வியொன்று எழுப்பப்படும் பட்சத்தில் அதற்கான பதிலை பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 


இருந்தபோதிலும், மேற்படி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளை சுட்டிக்காட்டி தனது உரையின் இறுதியில் பதிலொன்றை வழங்கிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள
அகதிகளாக இங்கு வந்துள்ளவர்கள் சம்பந்தப்பட்ட நாட்டில் குற்றமிழைத்தவர்களாக இருந்தால், அந்நாடு கோரும் பட்சத்தில் நாம் அவர்களை ஒப்படைப்போம். எனினும், இதுவரை அவ்வாறான எந்தக் கோரிக்கை தகவலும் கிடைத்திருக்கவில்லை என்று தெரிவித்தார். 

TOTAL VIEWS : 1226
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nq9ro
  PLEASE ENTER CAPTA VALUE.