மகாநாயக்க தேரர்கள் களமிறங்க வேண்டும்; ஞானசாரர் அழைப்பு
2017-09-27 09:26:28 | General

அரசியலமைப்பு திருத்தத்தில் சிங்கள பௌத்தத்திற்கு பாதிப்பான விடயங்களுக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் களத்தில் இறங்க வேண்டுமெனவும் அவர்கள் களத்தில் இறங்குவார்களாக இருந்தால், தங்களின் உயிரைக் கொடுத்தாவது போராட்டத்திற்கு முகம்கொடுக்கத் தாம் தயார் என பொதுபலசேனா தெரிவித்துள்ளது.


இராஜகிரியவிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்;
நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எந்த எண்ணமும் கிடையாது. நூற்றுக்கு 10 வீதமானவர்கள் கூட அது தொடர்பான எண்ணத்தில் இல்லை.

இவ்வாறான நிலையில் மக்களுக்கு அவசியமில்லாத அரசியலமைப்பு திருத்தம் பற்றி வருடக் கணக்காக கதைத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது மக்களுக்கு வாழ்க்கைப் போராட்டம் தொடர்பான எண்ணங்களைத் தவிர வேறு எண்ணங்கள் மனதில் இல்லை. ஆனால், இப்போதுள்ள ஜோக்கர்கள் போன்ற குழுவொன்று செயற்பட்டு மக்களை இருளுக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றது. 


இது சிங்கள பௌத்த நாடு. இதனை சிங்களவர்களே ஆள வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். ஆனால், இந்த ஆட்சியாளர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. சரியான தீர்மானத்தை எடுக்க முடியாத ஜோக்கர்களே இருக்கின்றனர். 


வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பிரிவினைவாதம் , சமஷ்டி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அங்குள்ள மக்களுக்கு இது தொடர்பாக எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதேபோன்று தெற்கிலும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினை எதுவோ அதற்குத் தீர்வு காணாது நாட்டை குழப்பும் செயற்பாடுகளிலேயே இவர்கள் ஈடுபடுகின்றனர்.


அரசியலமைப்பு பிரச்சினை தொடர்பாக சிலர் மகிந்தவாதிகளாகவும்  சிலர் ரணில்வாதிகளாகவும் மேலும் சிலர் மைத்திரிவாதிகளாகவும் ஒவ்வொருவரும் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர். 

இப்போது யார் கூறுவதை நாங்கள் கேட்பது? எதிர்க்கட்சிகள்  நாட்டில் எத்தனை இருக்கின்றன?  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியென ஒன்று இருக்கின்றது. பொது எதிரணியென்று ஒன்று உள்ளது. உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் யார்?யார் கூறுவதை நாங்கள் கேட்பது? என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இப்போது குழப்பங்களை ஏற்படுத்தி மக்களின் பிரச்சினைகளை மறைக்கப் பார்க்கின்றனர். இதனை சிங்கள நாடு எனக் கூறுவதற்கு சிலர் விரும்பவில்லை. இப்போது இலங்கையர் என்ற விடயத்தை கொண்டு வருகின்றனர்.

ஆனால், இலங்கையர் என்பதற்கான அடையாளத்தை என்னவென்று தேடிக்கொள்ள முடியாது போயுள்ளது. இலங்கையர் என உணவு , கலாசாரம் , மொழி ஏதாவது இருக்கின்றதா? எதுவும் கிடையாது. இலங்கையர் என்றால் அவர்களை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் ஏதேனும் வேலைத்திட்டம் இருக்கின்றதா? எதுவும் கிடையாது. 


வடக்கில் சம்பந்தன் போன்றோர் தனியான அதிகாரங்கள் தொடர்பான கருத்துகளைக் கூறுகின்றனர். அதேபோன்று முஸ்லிம்களும் தங்களுக்கென உரிமைகளை தனியாக கோருகின்றனர். அப்படியென்றால் எங்கே இலங்கையர்? சிங்களவருக்கு மட்டும் இலங்கையர். 


ஏன் பழைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நீக்கி இப்போது அவசரமாக திருத்தத்தை கொண்டுவர வேண்டும்?  இலங்கை  கிரிக்கெட் அணி போன்று அரசியல்வாதிகள் மாறிவருகின்றனர். இதனால், இந்த ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்து இருக்கின்றனர்.

ஏதோவொரு கட்டத்தில் போராட்டத்திற்கு வர முடியாமலும் இல்லை.   புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவோ நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பான விடயங்களுக்கு எதிராகவோ மகாநாயக்க தேரர்கள் களத்தில் இறங்குவார்களாக இருந்தால், நாங்களும் உயிரைக் கொடுத்தாவது அவர்களுடன் சேர்ந்து இறங்குவோம் எனவும்  தெரிவித்தார். 

 

TOTAL VIEWS : 1182
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
px4kh
  PLEASE ENTER CAPTA VALUE.