காணிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை; புதிய இராணுவத் தளபதி கூறுகிறார்
2017-07-11 09:22:33 | General

யுத்தத்தின் போது தேவையின் நிமித்தம் வடக்கில் இராணுவத்தால் பெரும் பகுதி நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது அங்குள்ள களநிலைவரம் தெரியும் என்பதால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஏனைய முக்கிய இராணுவ முகாம்கள் தவிர்ந்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது என்றும்  புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் 
சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 


அத்துடன், 2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவுக்கு பின்னர் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சர்வதேச மட்டத்திலான குற்றச்சாட்டுக்களை பொறுத்த வரையில், உண்மையை பேசி அதன்படி செயற்பட்டால் அவ்வாறானதொரு நிலைமை எழாது என்றும் கடந்த காலங்களில் அவ்வாறான குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


"டெய்லிமிரர்' பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியொன்றிலேயே லெப். ஜெனரல் மகேஷ சேனாநாயக்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 
அவரது பேட்டியிலிருந்து சில முக்கியமான பகுதிகள் பின்வருமாறு;


கேள்வி: இந்த நாட்டில் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிகம் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பிரதானமாக இலங்கை இராணுவத்துக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் மற்றும் இதை எப்படி உங்களது தலைமைத்துவத்தின் கீழ் கையாளப் போகிறீர்கள்?


பதில்: ஒழுக்கமே எமது இராணுத்தின் பலம். நாம் அதை தொடர்ந்தும் மேம்படுத்த விரும்புகிறோம். அதற்கு அதிக முயற்சிகள் அவசியம். எந்நேரமும் ஒழுக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இராணுவமொன்று இருக்க முடியாது. இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் நோக்கி விரல் நீட்டுவோரிடம் அவர்களது குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நேரடித் தகவல்கள் இருக்கின்றனவா, அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் அந்த இடத்தில் இருந்தார்களா அல்லது கேள்விப்பட்ட விடயங்களையோ அல்லது சில வதந்திகளையோ அடிப்படையாகக் கொண்டு அவற்றை தெரிவிக்கிறார்களா என்று எனக்கு தெரியாது.

ஆகவே, அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகங்கள் இருக்கின்றன. அதிகாரிகளோ அல்லது சாதாரண படையினரோ அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கவில்லை என்பது இராணுவ அதிகாரி என்ற வகையில்  எனக்குத் தெரியும். எவ்வாறிருப்பினும், இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாம் அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 


சாதாரண பிரஜைகளுடன் ஒப்பிடும் போது படையினர் இரு சட்டங்களுக்கு உட்படுவர். ஒன்று சிவில் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை. இன்னுமொன்று இராணுவ குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை. ஆகவே, இராணுவத்திலுள்ள யாரேனும் அந்த இரு சட்டங்களையும் மீறியிருக்கும் பட்சத்தில் நாம் நிச்சயமாக அவசியமான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்போம். 


கேள்வி: 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட உலகளாவிய மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் குற்றச்சாட்டுக்களுக்கு அமைப்பென்ற வகையில் நீங்கள் இன்னும் பதிலளித்திருக்கவில்லை. 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஜெனீவாவில் வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆகவே, உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் இந்த விவகாரத்தை சரிப்படுத்தும் ஏதேனும் திட்டங்கள் உங்களுக்கு இருக்கிறதா? 


பதில்: நாம் உண்மையை பேசி அதன்படி செயற்பட்டால் இந்த நிலைமை எழாது. கடந்த காலங்களில் அவ்வாறான குறைபாடுகள் இருந்திருக்கலாம். அவ்வாறு ஏதேனும் இருந்தால் அவற்றை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை நான் எனது பதவிக் காலத்தில் எடுப்பேன். யாதேனும் புரிந்துணர்வின்மைகளை சரிசெய்வதற்கு சமாந்தரமான பொறிமுறைகள் இல்லாதிருந்ததையும் நான் அவதானித்திருக்கிறேன். அவ்வாறான தயார்படுத்தல் எமக்கு இருந்திருந்தால் இந்த வகையிலான நிலைமையொன்று எழுந்திருக்காது. 


கேள்வி: ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. உங்களது நிர்வாகத்தின் கீழ் இதில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? 


பதில்: தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சி.ஐ.டி.) விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது சர்வதேச அக்கறை பற்றிய பிரச்சினையொன்று என்பது எனக்குத் தெரியும். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலும் தகவல்களை திரட்டுவதற்கு யுத்தத்தின் போது அங்கிருந்த அதேபோல், விடயம் தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட எனது அதிகாரிகள் மற்றும் படையினர் மற்றும் சட்ட நிபுணர்களின் உதவியுடன் இந்த நிலைமையை தெளிவுபடுத்த நான் எதிர்பார்த்துள்ளேன். நாட்டு நலனின் பேரிலேயே நாம் அதை செய்கிறோம். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 


கேள்வி: வடக்கு மாகாணத்தில் காணிகள் விடுவிப்பு தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. காணிகள் விடுவிப்பானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பாராளுமன்றத்திலுள்ள எதிரணியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுகின்றனர். இதேநேரம், வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கிறாரே?


பதில்: இராணுவத்தின் தலைமை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னதாக 14 மாதங்களாக யாழ். குடாநாட்டு பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக நானே இருந்தேன். 8 வருடங்களுக்கு முன்னதாக 2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்தது. அனைத்து மக்களும் எமது மக்களே. அவர்கள் இலங்கையர்கள். ஆகவே, அரசாங்கம் என்ற வகையிலும் அதேபோல் இராணுவமும் நாட்டு பிரஜைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.


யுத்தத்தின் போது வடக்கில் பெரும் பகுதி நிலப்பரப்பை இராணுவம் கையகப்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் அது அவசியமாக இருந்தது. அதன் பின்னர் அங்கு கண்காணிப்பு காலப்பகுதியொன்று இருந்தது. தற்போது அங்குள்ள களநிலைவரம் என்னவென்பது எமக்குத் தெரியும். ஆகவே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஏனைய முக்கிய இராணுவ முகாம்கள் தவிர்ந்த காணிகளை நாம் விடுவிக்க வேண்டும்.

ஏனெனில், அவ்வாறு செய்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது. அவ்வாறான விடயங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் பகிரங்க மேடைகளில் பேசுவோரிடமிருந்து நாம் ஆலோசனைகளை பெற முடியாது. 


விக்னேஸ்வரன் எனது நண்பர். அவருக்கு அவரது அரசியல் அபிப்பிராயங்கள் இருக்கலாம். இப்போதும் சரி அல்லது எதிர்காலத்திலும் சரி இராணும் என்ற வகையில் அவரது அறிவித்தல்கள் பற்றி நாம் கவலைப்படவில்லை. எந்தவொரு அவசர நிலைமையை சந்திக்கவும் நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறோம். யாரும் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. அரசியல் என்பது இராணுவத்தின் கரிசனைக்குரிய விடயமல்ல. 

 

TOTAL VIEWS : 1745
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ykl0q
  PLEASE ENTER CAPTA VALUE.