கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் காத்திரமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாமா? 
2017-10-30 12:26:30 | General

அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடயம் ஆகியவற்றிலும்கூட கையாலாகாத ஆட்களாக நாங்கள் இருக்கிறோம். நாம் அனைவரும் அறிக்கைகளை விடுகிறோம். வாய்கிழிய பேசுகிறோம்.

எமது கோரிக்கைகளை அரசாங்கம் உரிய வகையில் செவிமடுக்கவில்லை என்றால் ஒரு காத்திரமான ஜனநாயகப் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டாமா என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சனிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்த்தன் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஆர்.ஆர்இ ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் டெலோ கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தற்கால தமிழ் அரசியல் நிலைமை குறித்து பேசப்பட்டபோது,

 தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புஇ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி தீர்வு காணவில்லை. மக்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பை தந்தை செல்வநாயகம் தீயிட்டு கொளுத்தினார். அந்த செல்வாவை தமது அரசியல் சொத்தாகக் கொண்டாடுகின்ற தமிழரசுக் கட்சியோ அல்லது நாங்களோ இதுவரையில் எதனைச் சாதித்தோம்? எத்தகைய ஜனநாயகப் போராட்டங்களை நடத்தியுள்ளோம்? எனறும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:

 வடக்கு-கிழக்கில் உள்ள தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாதம் மும்மாரி பொழிகிறது என்று சொன்னார்களா அல்லது அங்கு பிரச்சினை இருக்கிறது என்று சொன்னார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அனைவரும் தொடர்ந்தும் வடக்கு-கிழக்கில் மக்களுடன் மக்களாக இருக்கின்றோம்.

ராஜபக்ச எப்படி ஆயுதப் போராட்டத்தை உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் அழித்து இல்லாமல் செய்திருந்தார். நாம் உருவாக்கிய இந்த அரசாங்கத்தில் அதைப்போன்றே ஜனநாயகரீதியாகக்கூட எம்மால் எம்மக்களிடம் போக முடியவில்லை.

சின்னசின்ன விடயங்கள் தொடர்பாகக்கூட எம்மால் அரசாங்கத்துடன் பேசமுடியாதுள்ளது. நாங்கள் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் முதல் அரசியல் தீர்வுவரை இந்த அரசாங்கத்துடன் ஒருமுறையாவது பேசுவோம்.

இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு காலக்கெடுவையும் கொடுப்போம் என்று இதே இடத்தில் நாம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் கருத்துரைத்தோம்.

அதைப் போன்று வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பிலும் சமஷ்டி அரசியலமைப்புமுறை குறித்தும் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம் என்றும் நாம் கருத்துத் தெரிவித்திருந்தோம். எமது கோரிக்கைகள் எதுவுமே இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் கைதிகள் விடயத்தைப் பொறுத்தவரை இந்த நாட்டின் நீதியமைச்சர் அரசியல் கைதிகள் என்று ஒருவரும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தனது இணக்கத்தைத் தெரிவித்துள்ளது.

ஐ.நாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைக்கூட கடந்த இரண்டு வருடங்களில் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் மீண்டும் இரண்டு வருடம் கால அவகாசம் வழங்குவதற்கு அனைத்து மாகாணசபை உறுப்பினர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்துவாங்கி சம்மதத்தைப் பெற்றிருந்தீர்கள். இன்றுவரை 2015ஆம் ஆண்டின் 30ஃ1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயமுமே நிறைவேற்றப்படவில்லை.

இப்பொழுது அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்தால் மகிந்த என்ற பேய் ஆட்சிக்கு வந்துவிடும் என்று அரசாங்கம் பயம்காட்டுகிறது. மகிந்தராஜபக்ச என்ற பேயை நடுவீட்டில் வைத்திருப்பது மைத்திரிதானே தவிர நாங்கள் இல்லை. இன்று ஐ.நாவில் மின்சாரக் கதிரையில் இருக்க வேண்டிய மகிந்தராஜபக்சவையும் அவருடன் இணைந்த 40 இராணுவத் தளபதிகளையும் காப்பாற்றிவிட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்தான்.

புலிகள் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தென்பகுதியில் அரசியல் செய்வதற்கு மைத்திரி-ரணில் ஆகியோருக்கு மகிந்த என்ற பெயர் தேவையாக இருக்கிறது. ஒன்றுமில்லாத இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு நாடுபிரியப் போகிறது என்று சொல்வதும் சொல்லவைப்பதும்தான் அவர்களுடைய அரசியல். இடைக்கால அறிக்கையால் சிங்கள மக்களுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. தமிழ் மக்களுக்கே பாதிப்பு அதிகம். போர்க்குற்றம்இ மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எம்மைப் பயன்படுத்துகிறது.

இதே பௌத்த பிக்குகள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் பிடி இலங்கை அரசாங்கத்தின்மீது இறுகி இருந்தவரை வாய்திறக்கவில்லை. இன்றைக்கு நாம் இந்த அரசாங்கத்தையும் முன்னாள் ஆட்சியாளர்களையும் காப்பாற்றிவிட்டோம். இதனால் அவர்கள் ஒன்றுமில்லாத இடைக்கால அறிக்கையையே நாட்டைப் பிளவுபடுத்தப் போகிறது என்று வாதிடுகிறார்கள்.

மைத்திரியிடம் இனவாதம் இல்லைஇ மதவாதம் இல்லை சந்திரிகாவோஇ மைத்திரியோஇ ரணிலோ இனி ஒரு தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். இவர்கள் தமது காலத்திற்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். இன்றைக்கு என்ன நடந்துள்ளது? நாங்கள் பேசிய விடயங்கள் எதையுமே நீங்கள் கவனத்தில் எடுக்கவில்லை. தன்னிச்சையாக நீங்கள்தான் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் பேசினீர்கள். இன்றுவரை ஒருசுற்று பேச்சுவார்த்தைகூட நடத்த முடியவில்லையே. நாம் பேசியிருந்தால் இந்த அரசாங்கத்தை அம்பலப்படுத்தியிருக்கலாமே.

இந்த இடைக்கால அறிக்கையையே ஏற்க மறுக்கின்றனர். நீங்கள் இதைவிட மேலதிக அதிகாரங்கள் குறித்து ஏதேனும் இரகசிய உடன்பாடு ஏதேனும் செய்துகொண்டிருக்கிறீர்களா என்பது எங்களுக்குத் தெரியாது. இன்றைய நிலையில் ஒன்மில்லாத இந்த இடைக்கால அறிக்கைக்கு ராஜபக்ச இதனைக் குழப்புகிறார் என்று சொல்கிறார்கள். ராஜபக்சவின் ஊழல் மோசடிகள்இ மனித உரிமைகள் மீறல்இ போர்க்குற்றங்கள் போன்றவற்றை மறைப்பதற்காகத்தான் இதைக் குழப்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இன்று ராஜபக்சவைக் காப்பாற்றியது யார்? ராஜபக்சவை நடுவீட்டில் வைத்திருப்பவர்கள் மைத்திரிதான்.

ராஜபக்ச அரசாங்கத்துடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ராஜபக்சவின் அரசாங்கத்தில் பேசாத விடயங்களையெல்லாம் மைத்திரியின் அரசிடம் பேசுகிறீர்கள். ராஜபக்ச அரசாங்கத்தில் போராடாத நீங்கள் இப்பொழுது போராட்டம் நடத்துகிறீர்கள் என்று எங்களைப் பார்த்து பேசினீர்கள். ராஜபக்சவிடம் நீங்கள் இரண்டுமுறை சென்று பேசினீர்கள். மீண்டும் அரசியலுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தீர்கள். என்ன அடிப்படையில் நீங்கள் பேசினீர்கள்?

கடந்த இரண்டரை வருட காலத்தில் நாம் அடைந்த ராஜதந்திர வெற்றி என்ன? பத்தி எழுத்தாளர்கள் தொடக்கம் பல்கலைக்கழக சமூகம்வரைஇ வடக்கு முதலமைச்சர் முதல் தமிழ் மக்கள் பேரவை வரை உள்ள சட்டத்தரணிகளும் இதில் உள்ள விடயங்களை விலாவாரியாக எடுத்துரைத்துள்ளனர். எங்களுக்கு வேண்டுமானால் சட்டம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சட்டத்தரணிகளே இதில் ஒன்றும் இல்லை என்றும் மிகவும் குழப்பகரமானதொன்று என்றும் சொல்லியுள்ளனர்.

சுமந்திரனைப் போன்று பேராசிரியர் சர்வேஸ்வரன்இ காண்டீபன், சிறிகாந்தா போன்று ஏராளமான சட்டத்தரணிகள் இருக்கின்றனர். இதில் என்ன இருக்கிறது இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஆகவே நாம் மக்களை முட்டாள்களாக்க இயலாது. நாம் அடுத்த வருடம் மக்களிடம் செல்லப் போகிறோம். எதைச் சொல்லி மக்களிடம் போகப்போகிறோம்?

சர்வதேசம் எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது ஆகவே அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கப்போகிறோமா? அல்லது மீள்குடியேற்றம்இ அரசியல் கைதிகள் விடுதலைஇ காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கப்போகிறோமா? எதை முன்வைத்து நாங்கள் மக்களிடம் வாக்குக் கேட்கப்போகிறோம்? எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களில் ஏதேனும் ஒன்றை நாம் நடைமுறைப்படுத்தியிருக்கிறோமா?

ஆகவேஇ நாம் இந்த அரசாங்கத்திற்கு முறையான அழுத்தத்தைப் பிரயோகிக்காமல் அரசாங்கம் தானாக முன்வந்து ஏதாவதொரு தீர்வைத் தரும் என்று சொன்னால் அது கனவிலும் நடவாது. எஸ்எல்எவ்பி ஒரு தீர்வை முன்வைக்கும்போது யுஎன்பியும்இ யுஎன்பி ஒரு தீர்வை முன்வைக்கையில் எஸ்.எல்.எவ்பியும் அதனைக் குழப்பியடித்தமையும்தான் வரலாறு. இப்பொழுது இருவரும் எங்களுக்கு ஏதோ சாதகமாக இருப்பது போலவும் ராஜபக்சதான் அதனைக் குழப்புவது போலவும் காட்ட முற்படுவது ஒரு அரசியல் நாடகம். மைத்திரியும் ரணிலும் இணைந்து தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியலமைப்பு முறையை தருவதற்குத் தயாராக இருப்பது போலல்லவா எங்களுடைய ஆட்கள் கதைக்கினம். எதனடிப்படையில் இத்தகைய கருத்துக்களை முன்வைக்கிறீர்கள்? இன்றைக்கு ராஜபக்சவைக் காட்டுகிறீர்கள். இவர் இல்லை என்றால் காலாதிகாலமாக நடைபெறுவதைப்போல் மற்றொருவர் வருவார்.

எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எங்களுக்கென்று என்ன நிகழ்ச்சி நிரல் உள்ளது? இந்த இரண்டரை வருடகாலத்தில் நாம் சர்வதேச சமூகத்தை சரியாகக் கையாண்டிருக்கின்றோமா? இந்த அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவருவதற்கேற்ப ஒரு ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோமா? நாம் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு அரசாங்கம் எமக்கு ஏதேனும் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் எதுவுமே நடக்காது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே ஆறுமாதம் கடந்துவிட்டால் இவர்கள் தங்களது தேர்தல்களில் முழுமூச்சுடன் இறங்கிவிடுவார்கள். அவர்களை நெருங்குவதே எமக்குக் கடினமாகிவிடும் என்று நாங்கள் கூறியிருந்தோம். அதனைப்போன்றே அனைத்தும் நடைபெற்றது. எங்களது ராஜதந்திரம் அனைத்தும் தோல்வி கண்டுள்ளது. புலிகளின் ஆயுதப்போராட்டம்தான் மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளதே தவிரஇ அரசியல் ரீதியில் நாம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் பல இருந்தும் அவற்றை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச சமூகம் அறிவித்துள்ளது. இத்தகைய கொடுமைகள் மீளவும் நடைபெறாமல் இருப்பதற்கு தேசிய இனப்பிரச்சினை தீரக்கப்படவேண்டும் என்று அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். இவ்வளவு இழப்புக்களைச் சந்தித்த தமிழ் மக்களின்மீது சர்வதேச சமூகத்திற்கு இருந்த அனுதாபங்களை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும்இ அறிக்கையிடலாளர்களும் கொடுத்த அழுத்தங்களின் அளவிற்கு பாதிக்கப்பட்ட தரப்பினரான நாங்கள் எத்தகைய அழுத்தத்தை அரசாங்கத்தின் மீது பிரயோகித்துள்ளோம்? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகமும் அரசாங்கமும் இணங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் என்ன செய்தோம்? கடந்த இரண்டு ஆண்டுகளிலும் எதுவும் செய்யவில்லை. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு கால நீடிப்பு வழங்கிய பின்னரும் எதுவும் செய்யவில்லை.

இப்பொழுதும்கூட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் ராஜபக்ச வந்துவிடுவார் என்று நாம் மௌனமாக இருக்கிறோம்.
ராஜபக்ச பேய் பூதங்களைக் காட்டிக்கொண்டு நாங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கையாலாகாதவர்களாக இருக்கப்போகிறோம்? எங்களைப் பொறுத்தவரை கடந்த இரண்டரை வருட காலத்தில் எமது இராஜதந்திரம் படுதோல்வி. நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு எத்தகைய அழுத்தத்தையும் வழங்கவில்லை. நாம் பேசாமல் இருந்தால் எங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்றிருந்தால் எங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.

வவுனியாஇ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 252க்கும் மேற்பட்ட நாட்களாக 80 வயதை கடந்த தாய்மார்கள் கூட வீதிகளில் இறங்கி தமது உறவுகளுக்காக ஏங்கித் தவிக்கின்றனர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமிழர்கள்தானே இருந்துவிட்டுப் போகட்டும் எமக்கென்ன என்றிருக்கின்றனர். ஆனால் நாங்கள் அவ்வாறு இருக்க முடியுமா?

ஒரு நாளைக்காவது அந்த மக்களை அழைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னிலையில் ராஜபக்ச உங்களது உறவினர்களைக் கொன்றுவிட்டார் என்று சொல்லிஇ சரி மரணித்தவர்களுக்கு நாங்கள் விசாரணை நடத்தி உரிய நட்டயீடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லும்படி வலியுறுத்தினோமா? இந்த மக்களை ஏமாற்றாதீர்கள். இங்கிருக்கும் எவரேனும் ஒருவரது தாய்இ சகோதரர்இ கணவன் அல்லது மனைவிஇ பிள்ளைகள் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் நாம் இப்படித்தான் அமைதியாக இருப்போமா?

ஏ9 வீதியில் ஒரு மணித்தியாலத்திற்கு எத்தனை வாகனம் பயணிக்கிறது? எவ்வளவு இரைச்சல்இ தூசிஇ மழைஇ வெயில்இ பனி இவைகளுக்கு முகங்கொடுத்து தமது உறவுகளைத் தேடி போராடும் எமது மக்களைப் பற்றி நாம் ஓரளவாவது சிந்தித்தோமா? சிங்களவர்கள் வாய்மூடி இருக்கிறார்கள். அவர்களுக்கு எம்மீது அக்கறை இல்லை. தமிழன்தானே இருந்துவிட்டுப் போகட்டும் அவர்களின் போராட்டத்தால் தென்பகுதிக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்ற மமதையில் அவர்கள் இருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் ராஜபக்ச சுட்டுவிட்டார் என்றால் சுட்டுவிட்டார் என்று சொல்ல வேண்டியதுதானே? ஏன் அவரால் எட்டு வருடங்களாக அதற்குப் பதில் சொல்ல முடியாதிருக்கிறது? அப்படி சொன்னால் அவர் சர்வதேசத்தின் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் அவர் வாய்மூடி இருக்கிறார்.

ஆனால் எமது உறவுகள் தாங்கள் மரணிப்பதற்கு முன் தமது உறவை ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்று ஏங்குகின்றனர். அந்த ஏக்கத்திலேயே சில தாய்மார்கள் மரணித்துள்ளனர். இப்படிப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான நாம் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா? இவைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகச் சொல்லித்தானே நாம் வாக்கு கேட்டோம். அதனடிப்படையில் அவர்களை அழைத்து அரசாங்கத்துடன் பேசி அவர்களுக்கான ஒரு பதிலைக்கூட எம்மால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
அரசியல் கைதிகளின் விடயம்இ காணி விடயம் ஆகியவற்றிலும்கூட கையாலாகாத ஆட்களாக ஒரு சப்பாணிக் கூட்டமாக நாங்கள் இருக்கிறோம். நாம் அனைவரும் அறிக்கைகளை விடுகிறோம். எல்லோருமே அறிக்கை விடலாம். எல்லோரும் வாய்கிழிய பேசுகிறோம். இனி எங்களுக்கு நடைமுறையில் ஏதாவது தேவை. எமது கோரிக்கைகளை அரசாங்கம் உரிய வகையில் செவிமடுக்கவில்லை என்றால் ஒரு காத்திரமான ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாம் முடிவெடுக்க வேண்டும்.

1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பை தந்தை செல்வா தீயிட்டுக் கொளுத்தினார். அந்த செல்வாவை தமது சொத்தாகக் கொண்டாடுகிற நீங்களோ அல்லது நாங்களோ எதைச் சாதித்தோம்? எத்தகைய ஜனநாயகப் போராட்டங்களை நடத்தியுள்ளோம்?

TOTAL VIEWS : 261
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
k7isp
  PLEASE ENTER CAPTA VALUE.