மந்தகதியிலான நடவடிக்கைகளால் அரசின்மீது தமிழ் மக்கள் விரக்தி; ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஹுசைன்
2017-09-12 11:18:46 | General

வடக்கில் பாதிக்கப்பட்டோரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களானது அரசின் மந்த கதியிலான மறுசீரமைப்பு பணிகள் மீதான அவர்களது அதிகரிக்கும் விரக்தியை எடுத்துக்காட்டுவதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுசைன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.


அத்துடன், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மீதான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் நம்பகரமான நடவடிக்கையொன்று இல்லாமையானது உலகளாவிய நீதி செயலாட்சியின் (Universal Jurisdiction) உபயோகத்தை மேலும் அத்தியாவசிமாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வுக்கான தமது ஆரம்ப உரையிலேயே உயர்ஸ்தானிகர் அல் ஹசைன் இலங்கை தொடர்பில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையை பொறுத்த வரையில், காணாமல்போனோர் அலுவலகத்தை விரைந்து செயல்படுத்துமாறும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் விடுவிப்பு போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஏனைய அத்தியாவசிய நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை தீர்த்தல் தொடர்பில் வேகமாக செயற்படுமாறும் நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீள வலியுறுத்தியுள்ளார். 
அந்த சட்டத்திற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு அமைவான புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்கான எனது கோரிக்கையையும் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று ஐ.நா. உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். 


வடக்கில், பாதிக்கப்பட்டோரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களானது மந்த கதியிலான மறுசீரமைப்புகள் மீதான அவர்களது அதிகரிக்கும் விரக்தியை எடுத்துக்காட்டுகின்றன. மாற்றுநிலை நீதி பொறிமுறைகளை ஸ்தாபிப்பதற்கு 30/1 ஆம் இலக்க தீர்மானத்தில் (ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் இலங்கையினதும் அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் பற்றிய தீர்மானம்) இலங்கை ஒப்பிய பொறுப்புகள் தொடர்பில் செயற்படுமாறும் இந்த மற்றும் ஏனைய ஒப்பிய பொறுப்புகளின் அமுலாக்கத்துக்கு தெளிவான காலவரிசையொன்றையும் வரையறைகளையும் ஏற்படுத்துமாறும் நான் அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன் என்றும் உயர்ஸ்தானிகர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 


அத்துடன், தமது அனைத்து மக்களினது உரிமைகளையும் பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய காரியமாக அரசாங்கத்தினால் இது பார்க்கப்பட வேண்டுமே தவிர, மனித உரிமைகள் பேரவையை சமாதானப் படுத்துவதற்காக நடவடிக்கைகளை பூர்த்தி செய்துவிட்டதாக பெயரளவில் கட்டங்களுக்கு புள்ளடியிடும் நடவடிக்கையொன்றாக இது பார்க்கப்படக்கூடாது என்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.  


இதேநேரம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீதான மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு நம்பகரமான நடவடிக்கையொன்று இலங்கையில் இல்லாமையானது உலகளாவிய நீதி செயலாட்சி நடைமுறையை மேலும் அத்தியாவசிமாக்குகிறது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


பிரேசிலுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் இராணுவ முன்னாள் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உலகளாவிய நீதி செயலாட்சி அடிப்படையில் பிரேசிலிலும் கொலம்பியாவிலும் அண்மையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரிடம் இருந்தும் இந்த கருத்து நேற்று வெளிப்பட்டிருக்கிறது.  


சர்வதேச சட்டத்தின் பிரகாரம், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, கடற்கொள்ளை, விமானக் கடத்தல் மற்றும் பல்வேறு வடிவங்களிலான சர்வதேவச பயங்கரவாதம் என்பன உலகளாவிய நீதி செயலாட்சியின் கீழான விடயங்களாக இருக்கின்றன. அந்த வகையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரொருவர் தொடர்பில் குற்றமிழைக்கப்பட்ட இடம், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தேசியத்தன்மை, வசிக்கும் நாடு போன்ற விடயங்கள் எதையும் பொருட்படுத்தாமல் அவர் மீது குற்றவியல் நீதி விசாரணையொன்றை கோருவதற்கு உலகளாவிய நீதி செயலாட்சி அரசுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் அனுமதியளிக்கிறது.

அதாவது, பிறிதொரு நாட்டில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தேசிய இனம் பாராது வேறொரு நாட்டில் குற்றவியல் நீதி விசாரணையை கோர இது வழிசெய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

TOTAL VIEWS : 1241
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
svhh1
  PLEASE ENTER CAPTA VALUE.