நால்வர் தீர்மானிக்க முடியுமானால் பாராளுமன்றம் எதற்கு?; சபையில் சுமந்திரன் கேள்வி
2017-07-07 09:46:06 | General

பா.கிருபாகரன்


நான்கு பேர் சேர்ந்து நாட்டில் என்ன நடக்கவேண்டும் என்பதை தீர்மானித்தால், பாராளுமன்றம் எதற்கு எனக் கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம். இதற்கு மேலாக எவரும் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.


அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கக் கூடாது, பின்வாங்க வேண்டிய அவசியமும் கிடையாது எனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி., அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் தோல்வியடையுமாயின் அது நல்லிணக்கத்துக்கான தோல்வியாகவே அமையும். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அரசாங்கம் முன்வைத்த காலை பின்வைக்காது அரசியலமைப்புத் தயாரிப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். 


கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;


ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என எம்மில் பலர் கூறி வருகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதால் காட்சி மாற்றங்கள் தெளிவாகத் தெரியவில்லை. மக்களின் காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதும், மேலும் துரித நடவடிக்கை அவசியம்.


பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக் கொள்வது குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் வாங்கவில்லை. பிறிதொரு தினத்தில் அதனை விவாதத்துக்கு எடுக்கும் என சபை முதல்வர் கூறியுள்ளார். இது முக்கியமானதொரு சட்டம்.

ஏன் இதனை அரசு பின்வாங்கியது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. குறிப்பாக சமயத் தலைவர்கள் சொல்லிய பின்னர் அரசு இதனை மீளப்பெற்றதா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இந்த சந்தேகம் அடிப்படையாக இருக்குமானால் பாராளுமன்றம் தேவையில்லை. நான்கு பேர் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான சட்டத்தை இயற்றிக்கொண்டிருக்கலாம்.


பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரம் கொண்ட உயரிய சபை என தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் பாராளுமன்றத்துக்கு மேலானதாக அல்லது உயர்ந்ததாக இன்னொரு சபை இருக்க முடியாது. எனவே சற்று தாமதித்திருக்கும் சட்டத்தை மீள்வாங்காது துணிவோடு அதனை நிறைவேற்ற வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். 


அதேநேரம், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெட்டத்தெளிவாக அறிவித்திருப்பது நல்ல விடயமாகும். இந்த அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் செயற்படவேண்டும். புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தே தீருவோம் எனக் கூறுவது நல்ல விடயம்.  

இதற்கமைய செயற்படுவது அவசியம். கடந்த ஒன்றரை வருடங்களாக வெவ்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி முதற்தடவையாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சமூக ஒப்பந்தத்தை அல்லது அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம். இது சிறப்பாக கைகூட வேண்டும். தோல்வியில் முடிந்ததாக இருக்கக்கூடாது. தோல்வியடைவதாக இருந்தால் நல்லிணக்கம் தோல்வியடைந்ததாகவே சரித்திரம் எழுதப்படும்.


நல்ல சிந்தனையோடு முற்போக்கு சிந்தனையோடு அமைந்த தேசிய அரசாங்கத்தின் ஒரே நோக்கம் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். பணியில் நாம் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பல தாமதங்கள், இடையூறுகள் மற்றும் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறான இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் என எதிர்பார்த்திருக்க முடியாது.  

தடங்கல் வரும்போது புறமுதுகிட்டு ஓடிவிடாமல் மக்களால் கொடுக்கப்பட்ட ஆணைக்கு அனைத்து மக்களின் உரிமைகளையும் நினைவில் கொண்டு சமூக ஒப்பந்தமான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.  இன ரீதியான சிக்கல்கள் நாட்டில் ஏற்பட்டிருக்காவிட்டால் எவ்வளவு சுபீட்சமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம்.

எனினும், இனரீதியான குழப்பம் ஏற்பட்ட நாட்டில் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில், சகலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அடிப்படைச் சட்டம், இனங்களுக்கிடையிலான சமூக ஒப்பந்தமாக அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 


இது விடயத்தில் அரசாங்கம் பூசி மெழுகாது, அடிப்படையில் மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறாது செயற்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு தேவையில்லையென சிலர் பறைசாற்றுகின்றனர். பொறுப்பான அரசாங்கம் இந்த விடயத்திலிருந்து பின்வாங்கக்கூடாது, பின்வாங்கவேண்டிய அவசியமும் கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்களும் முழுமையான ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த காலத்தில் ஆயுதமேந்திப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியினரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை பொறுப்புணர்வுடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சகலரும் ஒன்று சேர்ந்து செய்யும் விடயம் வெற்றிகாண வேண்டியது அத்தியாவசியமாகும்.

இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ள முதலாவது சந்தர்ப்பத்தை கிடைத்திருக்கும் ஒரேயொரு சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாமல் விட்டோம் என்ற பழிச்சொல்லுக்கு இடமளிக்கக்கூடாது என்றார். 

 

TOTAL VIEWS : 2296
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xtrv4
  PLEASE ENTER CAPTA VALUE.