தமிழரின் அபிலாஷைகளுக்கு குறுக்கே முஸ்லிம்கள் நிற்கக்கூடாது; அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்து
2017-10-06 09:51:48 | General

ந.ஜெயகாந்தன்


தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்பவர்களாக முஸ்லிம் தலைமைகள் இருந்துவிடக் கூடாது என்ற மிகத்தெளிவான கொள்கையிலேயே தாம் இருக்கின்றோம் என தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஏதேனும் கட்சியை சார்ந்தவர்கள் தங்களுடைய அபிலாஷைகள் இணைப்பை தடுப்பதிலும் பிரிப்பை கேட்பதிலும் மாத்திரம்தான் இருக்க வேண்டுமென கூறிக்கொண்டிருப்போராயின்  அது அவர்களின் வங்குரோத்து அரசியலின் மிக உச்சமே எனவும் தெரிவித்துள்ளார்.


கொழும்பு 2 இல் உள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் மற்றும் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இங்கு கருத்து தெரிவிக்கும் போது மேலும் தெரிவிக்கையில்;


ஒருபுறத்தில் தமது வயிற்றை வளர்க்கும் அரசியலுக்காக வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக ஆக்ரோசமாக பேசுவதாக ஒரு நாடகமும் , கிழக்கில் இருக்கும் ஒரு
சிலர் வட,கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் கை உயர்த்திவிட்டது என மற்றுமொரு தரப்பினரும் பேசுகின்றனர்.

கிழக்கில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயற்பாடு அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் ஒரே நோக்கத்தை கொண்டதாகவே இருக்கின்றது. சிங்கள மக்களின் வாக்கு இல்லாது பாராளுமன்றம் போக முடியாது என்பதற்காக கிழக்கை பிரிக்க வேண்டுமென கதைக்கின்றார்கள். முஸ்லிம்களின் நலன் சார்ந்த விடயமாக அதனை பார்க்கக் கூடாது. 


அப்படியென்றால் வட,கிழக்கு இணைக்கப்படக் கூடாது என பகிரங்கமாக பேச வேண்டிய தேவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குத்தான் கூடுதலாக இருக்க வேண்டும். ஏனென்றால், நான் சிங்கள மக்கள் வாழுகின்ற பிரதேசத்திலிருந்து பாராளுமன்றம் செல்லும் ஒரு உறுப்பினர்.

நான் இதனை தூக்கிப்பிடிக்கின்றேன் என்றால் எனக்குத்தான் மிக பிரயோசமானதாக இருக்கும். ஆனால், முஸ்லிம் காங்கிரசுஸுக்கென ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. இந்தக் கட்சி கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கம். கட்சிக்குள்ளும் இது பற்றிப் பேசுவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்கு சேர்க்க முடியும் என நினைப்பது பொருத்தமற்றது.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இதில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தற்காலிகமாக இணைக்கப்பட்ட வட,கிழக்கு என்ற நிலைப்பாடு இருந்த போது , முஸ்லிம்களின் ஆதரவு நிரந்தர இணைப்புக்கு தேவையென இருந்த போது ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் மிக கவனமாக இருந்தது.

இது ஏன் என்பதற்கு நாம் விளக்கம் கூற வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பாக நாம் ஆழமாக சிந்தித்ததன் விளைவாகத்தான் வட,கிழக்கு இணைப்பை நிரந்தரமாக்க வேண்டுமென்றால் முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் அலகு கட்டாயம் வழங்க வேண்டும் என்பதில் நாம் மிகக் கவனமாக இருந்தோம். 


எவ்வாறாயினும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்பவர்களாக முஸ்லிம் தலைமைகள் பார்க்கப்படக் கூடாது என்ற மிகக் காத்திரமான கொள்கைளில் நாம் இருக்கின்றோம். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவர்களின் அபிலாஷைகளை அவர்கள் பேசுவார்கள்.

எங்களுடைய அபிலாஷைகள் இணைப்பை தடுப்பதிலும் பிரிப்பை கேட்பதிலும் மாத்திரம்தான் இருக்க வேண்டுமென கூறிக்கொண்டிருப்பது வங்குரோத்து அரசியலின் மிக உச்சம் என்றே குறிப்பிட வேண்டும். இதனால் முஸ்லிம்கள் வாக்குத் தேட வேண்டும் என்பதும் மடமைத்தனமே. முஸ்லிம் காங்கிரஸில் இருப்பவர்கள் அரசியல் ரீதியில் மிகக் கூர்மையான அறிவுள்ளவர்களே.

இப்படியான கருத்துக்கள் மூலம் எமக்குள்ள பாரம்பரியம், எமது கொள்கைகள் ஆகியவற்றை குழிதோண்டி புதைத்துவிடக் கூடாது. எவ்வாறாயினும், எங்களுக்கென தனி அலகு என்ற விடயத்தில் நாங்கள் பிரிந்தாலும் இணைந்தாலும் அலகு வேண்டுமே. அதில் முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் அதாவது ஒரு நிர்வாக மாவட்டம் தேவையென்ற விடயத்தை மிகத் தெளிவாக நாம் பிரேரணையொன்று மூலம் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் வழங்கியிருந்தோம். ஆனால், அது அறிக்கையில் வேண்டுமென்றே சேர்க்காது விடப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறியுள்ளேன். 


இந்த பேரினவாத கட்சிகள் என்பது இந்த நாட்டில் சிதறி வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் முதுகுகளில் ஏறித்தான் அவர்களின் அரசியல் இலக்குகளை அடைய வேண்டும் என்ற அதீத செயற்பாட்டில் தொடர்ந்தும் இருக்கும் இயக்கங்களே. நாங்கள் வங்குரோத்து அரசியல் செய்யவில்லை. இதனால் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும். நாம் சிங்களவர்களுக்கு எதிரானவர்களோ, தமிழருக்கு எதிரானவர்களோ அல்ல. நாங்கள் நடுநிலையான சமூகமே. நாம் "உம்மத்தன் வஸத்தன்' எனும் குரான் வசனங்களுக்கு ஏற்ப வாழ வேண்டிய சமூகமே.

இந்த நாட்டில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் சமூகமே. ஆகவே, யாரோ ஒருவருக்கு தீனி போடுவதற்காக ஏதோவொரு இனத்திடத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக , குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாக மாறிவிடாது மிகத் தெளிவாக எமது நிலைப்பாடுகளை பேச வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

TOTAL VIEWS : 953
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
z1xfx
  PLEASE ENTER CAPTA VALUE.