'20'ஐ கூட்டமைப்பு ஆதரிக்கும்
2017-09-12 11:22:26 | General

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை இம்மாதம் 21 ஆம் திகதி வெளியாகும் எனவும், 20 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்குமெனவும் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில்  நேற்று திங்கட்கிழமை   காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்   போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து  பேசுகையில்; 


20 ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டமையினால் மக்களுக்கும் மாகாண சபைகளுக்கும் போதிய தெளிவு இல்லாமல் போனது. 
அந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில ஐயங்களை 
எழுப்பியிருந்தது. அதாவது மாகாண சபைகள் 5 வருடங்களுக்கு முன் கலைக்கப்பட்டால் மிகுதி காலத்தை பாராளுமன்றம் பொறுப்பேற்பது என்பதை நாங்கள் எதிர்த்தோம். 


அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கும் என கூறப்பட்டதையும் நாங்கள் எதிர்த்தோம். அதே சமயம் 20 ஆவது திருத்தச்சட்டம் உயர்நீதிமன்றில் வழக்கில் உள்ள நிலையில் சட்டமா அதிபர் முதல் நாளே அரசாங்கம் செய்யவுள்ள சில திருத்தங்கள் தொடர்பாக கூறியிருக்கின்றார். 


அதில் நாங்கள் கூறிய திருத்தங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. அதாவது ஒரே நாளில் மாகாண சபைகளுக்கான தேர்தலை பாராளுமன்றம் தீர்மானிக்காது அதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். 


மேலும் 5 வருடங்களுக்கு முன் மாகாண சபை கலைக்கப்பட்டால் மிகுதிக் காலத்தில் மாகாண சபைகளின் அதிகாரங்களை பாராளுமன்றம் எடுக்காது. அந்தக் காலத்திற்கு இடைக்கால தேர்தல் நடத்தப்படும். 


மேலும், 5 வருடங்களுக்குள் கலைக்கப்பட்டு மிகுதிக் காலம் 18 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் இடைக்கால தேர்தல் நடத்தப்படாது. அதற்குக் காரணம் தேர்தலுக்கான செலவு மற்றும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான காலம் போதாமை போன்றவற்றால் அதனை நடத்த முடியாது. இந்த அடிப்படைகளால் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். 


 கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இம் மாதம் 21 ஆம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும். இந்த இடைக்கால அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உருவாக்கப்பட்ட அறிக்கையாகும். 


இந்த இடைக்கால அறிக்கையில் அரசியல் கட்சிகளின் எழுத்துமூல கருத்துகளும் உள்ளடக்கப்படும். மேலும் வழி நடத்தல் குழு உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளையும் கூறியிருக்கின்றனர். 


அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கள் கருத்துகளை கூறியிருக்கின்றது. அதுவும் இடைக்கால அறிக்கையின் ஒரு அங்கமாக வரும். எமது கருத்துக்களில் நாட்டின் சுபாவம் சமஷ்டி அமைப்பாக இருக்க வேண்டும், மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த அலகாக இருக்க வேண்டும். 


அதேபோல் மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாக கேட்டுள்ளோம். அதேபோல் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டும் ஆனால் மற்றைய மதங்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறியிருக்கின்றோம். 


அதேசமயம் இடைக்கால அறிக்கையில் பிரதானமான பகுதியாக ஒரு பகுதி வருகின்றது. அதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் இரண்டும் ஒப்புதல் வழ ங்கினால் அடுத்த கட்டம் தொடர்பாக பேசுவதற்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கின்றோம். 


எனவே 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளியான பின்னர் நாட்டிலும் அரசியலமைப்புப் பேரவையிலும் விவாதங்கள் நடக்கும். அந்த விவாதங்களின் அடிப்படையில் ஒக்டோபர் மாதம் முழுமையான அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றார்.

 

TOTAL VIEWS : 1225
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kf7nw
  PLEASE ENTER CAPTA VALUE.