வட மாகாண சபையின் ஐவர் ஜெனீவா பயணம்
2017-09-12 11:21:01 | General

ரொஷான் நாகலிங்கம்


ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்குகொள்ளுமுகமாக வடமாகாண சபையைச் சேர்ந்த ஐவர் ஜெனீவா பயணமாகியுள்ளனர்.


மாகாண சபை  உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஏ.புவனேஸ்வரன், பா.கஜதீபன், எம்.தியாகராஜா மற்றும் அச்சபையின் முன்னாள் உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரே நேற்று திங்கட்கிழமை மாலை ஜெனீவா பயணமாகினர்.


அங்கு இவர்கள் யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் குறித்தான விசாரணையை முன்னெடுக்க உடனடியாக வெளிநாட்டு பொறி முறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளனர். 


இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்;
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் சூடுபிடிக்கும்.

அங்கு நாம்  மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர், பக்க நிகழ்வுகள் மற்றும் இராஜதந்திரிகளுடனான  சந்திப்புகளின் போது, யுத்தத்தின் போதான மனித உரிமை  மீறல் சம்பவங்கள் குறித்து உடனடியாக வெளிநாட்டு விசாரணையை  முன்னெடுக்குமாறு வலியுறுத்தவுள்ளோம்.


கலப்புப் பொறிமுறையூடாக விசாரணையை முன்னெடுக்குமாறு மனித உரிமை பேரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இருவருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த இரு வருடமும் முடிவடைந்து தற்போது ஆறு மாதமும்  கடந்துள்ளது. எனினும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுபோல் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இழுத்தடிக்கப்படுகின்றது.


இதேவேளை போர்க் குற்றம் தொடர்பில் எந்தவொரு இராணுவத் தினரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என அரச தலைவர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்க தயாரெனக் கூறுகின்றார்.

எனவே அரசாங்கத்துக்கு இனியும் கால அவகாசம் வழங்காது உடனடியாக வெளிநாட்டு விசாரணை பொறிமுறையை ஏற்படுத்துமாறு  வலியுறுத்தவுள்ளோம்.
ஜெனீவா கூட்டத் தொடரில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதியாக கலந்து கொண்டும் பக்க நிகழ்வுகளிலும்  இராஜதந்திரிகளுடனான சந்திப்புகளின் போதும் இதனை வலியுறுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 1148
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ypl6x
  PLEASE ENTER CAPTA VALUE.