குண்டும் பீரங்கியும் இல்லாத இன்றைய யுத்தம் ஆபத்தானது; அமைச்சர் மனோ கணேசன்
2017-10-06 10:00:52 | General

ந.ஜெயகாந்தன்


யுத்தம்  முடிந்துவிட்டது, எல்லாம் சரியாகிவிட்டது என யாரும் கூற முடியாது. தற்போதும் யுத்தமொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பீரங்கியும் குண்டும் இரத்தமும் இல்லாது யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது அப்போது நடந்த யுத்தத்தைவிட அபாயகரமானது என அரசகரும மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


தேர்தல் சீர்திருத்தம் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு கருத்துரை வழங்கும் போது மேலும் தெரிவிக்கையில்;


இந்தக் கால கட்டம் பீரங்கியும் , குண்டும் இல்லாத யுத்தம் நடக்கும் காலகட்டமாகவே இருக்கின்றது. யுத்தம் முடிந்துவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டது , பாலும் தேனும் ஓடுகின்றது என்று கூறமாட்டோம். பீரங்கியும் குண்டும் சதையை துளைத்துச் செல்லும் யுத்தத்தை விட இப்போது நடக்கும் யுத்தம் அபாயகரமானது என்றே சொல்வேன்.

முழு நாட்டையும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு சொந்தமான நாடாக வைத்துக்கொள்ளும்  வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் இன்றைய காலகட்டம் உள்ளது.  பேரினவாத கட்சிகளே இவ்வாறு செயற்படுகின்றன.

இவ்வாறான நிலைமையில் எதிர்நீச்சல்களை போட்டுக்கொண்டு சாணக்கியமாக சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து , அழ வேண்டிய இடத்தில் அழுது , அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்து முன்னேற வேண்டியதே கட்சி தலைவர்களின் பொறுப்பாக இருக்கின்றது. இந்த பொறுப்பை நாங்கள் கொண்டுள்ளோம். 


இதேவேளை  தேர்தல் முறைமை மாற்றம் என்பது சிங்கள மக்களின் தலைமைகளின்  கனவாக இருந்து வந்தது.  தேர்தல் முறைமையில் மாற்றம் வேண்டாம் என்பதே எமது தனிப்பட்ட கருத்தாகும். பழைய முறைமையே சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு மிகவும் சாதகமானதாக உள்ளது.


ஆனால், எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் விருப்பு வாக்குகள் என்ற தவறுதலான புரிதல் ஏற்பட்டுள்ளது. சமஷ்டி என்பது பிரிவினை என தவறாக புரிந்துள்ளதை போலவே இந்த விடயத்திலும் பிழையான புரிதல் சென்றுள்ளது. ஆகவே, இதனை விளங்கவைக்க இயலாது. எனவே பெரும்பான்மையின் ஆக்ரோசமான விருப்பின் முன்னால்  மோதுவதா அல்லது அவர்களுடன் சென்று நாம் எமது உரிமைகளைப் பெறுவதா என்பதை சிந்திக்க வேண்டும்.

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்தாலோசித்து எமது நிலைப்பாடுகளை ஆராய்ந்துள்ளோம். அத்துடன், பெரும்பான்மை கட்சிகளுடனும் நாம் கலந்துரையாடியுள்ளோம். அதேபோன்று பல்வேறு சிக்கல்களை நாம் சந்தித்துள்ளோம்.

எல்லை நிர்ணய விடயத்தில் நாம் சரியாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எம்மத்தியில் உள்ளது . இதற்கு முன்னர் செய்திருந்த எல்லை நிர்ணய முறைமையானது 70க்கு 30 வீதம் என்ற அடிப்படையில் அமைந்தது. ஆனால், அதில் 30 வீதம் கூட இருக்கவில்லை. அதுமட்டும் அல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை தடுக்கும் வகையில் காணப்பட்டன. ஆனால், இன்று அதெல்லாம் மாற்றப்பட்டுள்ளது. 


தற்போது எல்லை நிர்ணய விடயத்தில் நாம் மிகவும் தெளிவாக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் நிலத்தொடர்பு அற்ற தேர்தல் தொகுதிகளை அமைக்க முடியுமா , அதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் வினவியுள்ளார்.

தமிழ் மக்கள் பல்வேறு பகுதிகளில் சிதறி வாழ்கின்றார்கள். இவர்களை ஒன்று சேர்க்க முடியாத காரணத்தினால்  இது சாத்தியமா என்பதனை அவதானிக்க வேண்டும். அவரே முதலில் இக்கருத்தினை முன்வைத்தபடியினால் இந்த விவகாரங்கள் குறித்தும் அதிக கவணம் செலுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் இந்த விடயம் குறித்தும் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

 

TOTAL VIEWS : 1004
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
y4jks
  PLEASE ENTER CAPTA VALUE.