உத்தரபிரதேச வைத்தியசாலையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி

2017-08-13 13:52:07 | General

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, புதிதாக பிறந்த குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் கடந்த 5 நாட்களில் உயிரிழந்தன. கடந்த 3 நாட்களில் மட்டும் 35 குழந்தைகள் உயிரிழந்தது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அங்கு மூளை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 7 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்தாக அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து கடந்த 7–ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 60 குழந்தைகள் உயிரிழந்ததை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

அந்த மருத்துவமனைக்கு திரவ ஆக்சிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையினால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் பல்வேறு நோய்களினால்தான் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகமும், மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங்கும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனக்கூறி உள்ள சித்தார்த்நாத் சிங், சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழப்பதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த உயிரிழப்புகளால் அதிர்ச்சியடைந்துள்ள முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், சுகாதாரத்துறை மந்திரிகளான சித்தார்த்நாத் சிங் மற்றும் அசுத்தோஷ் தாண்டன் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று மருத்துவமனைக்கு சென்ற மந்திரிகள் அங்கு குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகள் மரணம் நிகழ்ந்த கோரக்பூர் மருத்துவமனையை எதிர்க்கட்சி தலைவர்கள் மொய்த்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் பொதுச்செயலாளரும், டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத், உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.பி.என்.சிங் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

முன்னதாக மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் நேற்று முன்தினம் முதலே மருத்துவமனையில் முகாமிட்டுள்ளார். இதைப்போல சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் உயர்மட்ட குழுவும் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

TOTAL VIEWS : 282
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vgwl7
  PLEASE ENTER CAPTA VALUE.